டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது: ஆர்.பி.உதயகுமார்!

டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவலால் தமிழக அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை அதிமுக பொதுக்குழு, செயற்குழு தீர்மானங்கள் குறித்த விவரங்களை வாக்காளர்களிடம் சேர்க்கும் வகையில் மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் வலையப்பட்டியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

மதுரை அருகே அமைய இருந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறதா? மத்திய அரசு என்ன உண்மையை சொல்கிறது என, மக்கள் மத்தியில் குழப்பமாக இருக்கிறது. சட்டசபையில் டங்ஸ்டன் பிரச்சினையில் திமுகவின் கபட நாடகத்தை எடப்பாடியார் தோலுரித்தார். திமுகவால் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை. அமைச்சர் துரைமுருகன் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட வேண்டும். ஏன் வெளிப்படையாக திமுக வெளியிடவில்லை என, எடப்பாடியார் கேள்வி எழுப்பினார். தற்போது டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவலால் திமுக அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுவிட்டது.

பெரியார் நினைவு நாளில் அவர் பயன்படுத்தி தடியை ஸ்டாலினுக்கு வீரமணி கொடுத்துள்ளார். சமூக நீதிக்காக போராடியவர் பெரியார். சமூக நீதி பேசும் ஸ்டாலின், தனது மகன் உதயநிதியை துணை முதல்வராக்கியுள்ளார். திமுகவில் சமூக நீதியே கேள்விக்குறி. அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடியாரும் சமூக நீதியை காப்பாற்றி மக்களை பயன்பெற வைத்தார். அலங்காநல்லூர் சர்க்கரை கூட்டுறவு ஆலையை தற்போது மூடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ரூ.23 கோடி வழங்கினோம். இந்த ஆலையை திறக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு பேசினார்.