டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு ஏலம் விட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை’ வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனம் பெற்றுள்ளது.
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய கனிமவளத் துறை மாநில அரசை குற்றம்சாட்டியுள்ளது. ஏலத்துக்கு முன்னர் தமிழ்நாடு அரசிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும் ஏலத்துக்கு எதிராக மாநில அரசு உள்பட யாரும் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் மத்திய கனிமவளத் துறை கூறியது.
இதையடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதற்கு விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
டங்ஸ்டன் ஏலத்தால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என 2023 அக்டோபரில் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். இந்த ஏலம் சட்டம்-ஒழுங்கு சூழ்நிலைக்கு வழிவகுக்கும், இதனை மாநில அரசே கையாளவேண்டிய சூழல் ஏற்படும். கனிமவளத் துறை ஆணையரின் கடிதத்தில், நில விவரங்கள் எதுவும் இல்லை.
அரிட்டப்பட்டியில் பல்லுயிர் தளம் உள்ளது. அது தெரிந்தே மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. ஏல அறிவிப்புக்கு ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால், தற்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் அதை நன்கு அறிவார்கள். அது வீண் முயற்சிதான்.
சுரங்கம் குத்தகைக்கு வழங்கப்பட வேண்டும் என்பது மாநில அரசுக்குத் தெரியும். குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும். மாநில அரசின் எதிர்ப்பு இருந்தபோதிலும், மத்திய அரசு ஏலம் விடுத்தது ஏன்? முதல்வரின் கடிதத்துக்குப் பின்னரே, கனிமவளத் துறை அமைச்சகம் இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கருதி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.