தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு கைத்தடி தேவைப்படுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தின நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் எம்.பி. சரத்குமார், நயினார் நாகேந்திரன் மற்றும் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசியபோது தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறோம், ஆனால் இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கிறது.
தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன், ஆசிரியர் வீரமணி ஒரு கைத்தடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தார். இது திராவிட மாடலின் அடையாளம் என்று முதல்-அமைச்சர் மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் நான் சொல்கிறேன், தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இன்று கைத்தடி தேவைப்படுகிறது என்று வீரமணியே கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
நல்லாட்சி என்றாலே வாஜ்பாய் தான் என்று பிரதமர் மோடி பதிவு செய்திருக்கிறார். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து சென்றவர். வாஜ்பாய் ஆட்சியும், பிரதமர் மோடியின் ஆட்சியும் தமிழகத்திற்கு வர வேண்டும் என்பது தான் எங்களின் சபதமாக இன்று எடுத்துக் கொண்டோம் என்றார்.
அமித் ஷா பேச்சு சர்ச்சையானது குறித்து பதிலளிக்கையில், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பேசினார். அதில் ஒன்றரை நிமிடத்தை எடுத்து வைத்து கொண்டு அரசியல் செய்கிறார்கள். இதில் நேரு செய்த தவறுகளை மறைக்க பார்க்கின்றனர். அதற்கு பதிலாக பாஜக மீதும், அமித் ஷா மீதும் குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கூட இரண்டே இரண்டு தலித் வேட்பாளர்களை தவிர எஞ்சியவர்கள் அனைவரும் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்றுள்ளனர். அண்ணன் திருமாவளவனை பார்த்து மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஏனெனில் அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் எதிர்த்தது ஓர் அரசியல் என்று கூறுகிறார். அப்படியெனில் ஓர் அரசியல்வாதியாக தான் அம்பேத்கரை பார்க்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் எல்லாம் அரசியலமைப்பு சட்டத்தை கையில் எடுத்து கொண்டு திரிகிறார்கள். ஆனால் நாங்கள் அதை கிரீடமாகவே வைத்திருக்கிறோம் எனக் கூறினார்.
தமிழகத்தில் பட்டியலின மக்களின் சுதந்திரம் எப்படி இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதில் 325 கிராமங்களில் பட்டியலின மக்கள் மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்று பதில் சொல்லப்பட்டுள்ளது. வேங்கைவயல் விஷயத்தில் இன்னும் பதில் சொல்லப்படவில்லை. இதை திமுக கூட்டணி கட்சியே ஒப்புக் கொண்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர்களின் கூட்டணியில் திருமாவளவன், கம்யூனிஸ்ட்கள், வேல்முருகன் உள்ளே இருப்பார்களா? என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் 200, 200 என்று அண்ணன் ஸ்டாலின் சொல்லி கொண்டிருப்பது நிச்சயம் கனவாக தான் போகும் என்று தமிழிசை தெரிவித்தார்.