விடுதலை படத்தில் வருவது போல உங்களை எல்லாம் குத்துவிட வேண்டும்: சீமான்!

திராவிடம் என்ற சொல் நேற்று வந்த பிச்சைக்கார சொல்; கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் தங்களை திராவிடர் மரபினம் வழிவந்தவர்கள் என்றா சொல்கிறார்கள்? விடுதலை படத்தில் வருவது போல உங்களை எல்லாம் குத்துவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு கொடுத்தால் திமுகவை ஆதரிக்க தயார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். அவருக்கு நன்றாகவே தெரியும்.. திமுக அரசு 15% இடஒதுக்கீட்டை தராது என.. அதனால் அப்படி சொல்லி இருக்கிறார். வன்னியர் இடஒதுக்கீடு குறித்தது வாயாவது திறக்கிறாரா? வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜக அரசிடம்தான் கேட்க வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறுகிறார்.. அப்படியானால் தமிழ்நாட்டில் அருந்ததியர், இஸ்லாமியருக்கு உள் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது எப்படி? எதற்கெடுத்தாலும் பந்தை திசைமாற்றிப் போடுகிறது திமுக அரசு. இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை குறித்து கேட்டால் ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்கிறது.. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்போம், என வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த திமுக இப்போது அத்தனைக்கும் மத்திய அரசை கை காட்டுகிறது.. இதே திமுகதான் மாநில தன்னாட்சி உரிமை பற்றி பேசுகிறது.. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசுகளே மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே சொல்லிவிட்டது.. உச்சநீதிமன்றம் இப்படி கூறிய பின்னரும் மத்திய அரசை கைகாட்டுவது ஏன்?

பெரியார் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலினுக்கு கைத்தடி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கைத்தடி உங்களுக்கு இப்போது பயன்படுகிறதா? திராவிடம் என்றால் என்ன என்று எதுவுமே தெரியாமல் கடைசியில் குச்சியை ஊன்றிவிட்டீர்கள்.. திராவிட தத்துவம் என்றால் என்ன என கேட்டால் கைத்தடி, கல்யாணம் என சொல்கிறீர்கள்.. திராவிடர் என்றால் மரபினம் என்கிறீர்கள்.. ஆனால் திராவிடர் மரபினத்துக்குள் வருகிற தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தமிழில் இருந்து பிரிந்தவர்கள்தானே.. அதனால் தமிழியம் என்று சொல்ல வேண்டியதுதானே? அதென்ன திராவிடம்? திராவிடம் என்பது எந்த மொழிச் சொல்? நேற்று வந்த பிச்சைக்கார சொல்லை வைத்துக் கொண்டு பேசுகிறார்கள் திராவிடம்.. திராவிடம் என்று.. கன்னடர்களும் மலையாளிகளும் தெலுங்கர்களும் தங்களை திராவிடர் மரபினம் வழிவந்தவர்கள் என சொல்கிறார்களா? இல்லையே. பிறகு எதற்கு திராவிடம்?. உங்களை எல்லாம் விடுதலை படத்தில் வருகிற மாதிரி குத்துவிட்டாதான் சரி வரும். இவ்வாறு சீமான் கூறினார்.