அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களை பொது வெளியில் கசியவிட்ட காவல்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் காவல்துறையும், அமைச்சரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். எப்ஐஆர் எப்படி வெளியில் கசிந்தது. புகார் கொடுத்த மாணவியின் அடையாளங்களை பாதுகாப்பது அவசியம். அதை எப்படி வெளியில் விட்டனர். கேட்டால் காவல்துறையில் தொழில்நுட்ப கோளாறு என்று கூறுகிறார்கள். அது உண்மையில்லை. ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி சமாளிக்கிறார்கள். ஞானசேகரன் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. அப்படியிருக்கும்போது அவர் எப்படி பல்கலைக்கழகத்தில் சாதரணமாக நடமாட அனுமதித்தனர். இந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காவிடின் தவறுகள் நடக்கத்தான் செய்யும்.
அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி புகாரளித்தவுடன் ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலில் விசாரித்து அனுப்பிவிட்டனர். எதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று ஆணையர் கூறினார். இன்றைக்கு மாற்றி பேசுகிறார்கள். அந்த நபரால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது. ஆனால் இந்த அரசாங்கத்தை நம்பி யாரும் புகாரளிக்க முன் வர மாட்டார்கள். புகாரளித்தவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவும்போது எப்படி தைரியமாக புகாரளிப்பார்கள். அரசாங்கம் நடுநிலையோடு செயல்பட்டால் தான் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிப்பவர்கள்.
இந்த ஆட்சியில் அண்ணாநகர் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அது வேறு காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த செய்தி வெளியில் பரவி, உயர் நீதிமன்றம் தாமாக வழக்கை விசாரணை எடுத்து மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்கள். அதை எதிர்த்து அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. அப்படிப்பட்ட அரசாங்கத்தை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் எப்படி புகாரளிக்க முன் வருவார்கள். அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். அவரின் புகார் அலட்சியப்படுத்தியதை உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்தது. இதை ஸ்டாலின் அரசாங்கம் மூத்த வழக்கறிஞர்களை வைத்து மேல் முறையீடு செய்கிறது. அப்படியென்றால் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பது தானே இவர்களின் நோக்கம். இதில் எல்லாம் நாங்கள் அரசியல் செய்யவில்லை. தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரிக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது. திமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு பாதாளத்துக்கு சென்றுவிட்டது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இப்போது திண்டுக்கல்லில் ஒரு பெண்ணை குத்தி கொலை செய்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை.
அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. கைதான ஞானசேகரன் இன்னொரு சார் என்று ஒருவரை குறிப்பிட்டதாக பாதித்த மாணவி புகார் அளித்துள்ளார். அவர் யார் என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும். விசாரணை நேர்மையாக நடைபெறவில்லையெனில் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.