’ஆன்மீக விடுதலை’ எனும் மூடநம்பிக்கையால் 4 பேர் தற்கொலை!

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் தாய் அவரது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் ஆன்மீக விடுதலை அடைய வேண்டும் எனும் நோக்கில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ருக்மணி ( வயது- 45), அவரது குழந்தைகளான ஜலந்தாரி (17) மற்றும் முகுந்த் ஆகாஷ் குமார் (12), கணவரிடமிருந்து விவாகரத்தான நிலையில் ருக்மணி தனது குழந்தகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் மூவரும் ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இவர்கள் மூவரும் சில மாதங்களுக்கு முன்பு இதே வியாசார்பாடியைச் சேர்ந்த ஸ்ரீ மஹாகாலா வியாசர் (40) எனும் நபரை தங்களது ஆன்மீகப் பயணத்தின்போது சந்தித்துள்ளனர். இருதரப்புக்கும் ஆன்மீகத்தின் மீது அதீத பற்று இருந்ததினால் அவர்கள் 4 பேரும் ஒன்றாகவே ஆன்மீகப் பயணங்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். இறுதியாக, கார்த்திகை தீபத் திருநாளன்று ஒன்றாக திருவண்ணாமலை சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (டிச.27) அவர்கள் மூவரும் சிவன் மற்றும் மஹாலட்சுமி தேவியின் திருவடிகளை சென்றடைந்து மோட்சம் பெறவுள்ளதாக கூறி மீண்டும் திருவண்ணாமலைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அங்கு மதியம் 2 மணியளவில் கிரிவலப் பாதையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். கடைசியாக மாலை 6 மணியளவில் அந்த விடுதி ஊழியர்களிடம் தாங்கள் மேலும் ஒருநாள் அங்கு தங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் திறக்கபடாமலேயே இருந்த அவர்களது அறையின் கதவை விடுதி ஊழியர்கள் தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் உள்பக்கம் பூட்டப்பட்ட நிலையில் அவர்களது கதவு திறக்கப்படாமல் இருந்ததினால், அந்த விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். அந்த புகாரைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தபோது, நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் ஆன்மீக விடுதலை அடையும் நோக்கில் தற்கொலை செய்துக் கொள்வதாக குறிப்பிட்டு எழுதிய ஒரு கடிதமும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இத்துடன் அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் விடியோவும் அவர்களது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக விடுதலை எனும் மூடநம்பிக்கையால் குழந்தைகள் உள்பட 4 பேர் தற்கொலை செய்துக் கொண்டது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.