அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொதுநல வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. வழக்கை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், லட்சுமி நாராயணன் அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சீலிடப்பட்ட விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். அப்போது முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்ட விவகாரத்தை பொறுத்தவரை, சிசிடி என் எஸ் முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவேற்றம் செய்யப்படும். பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு விவரங்களை கம்ப்யூட்டர் தடுத்து விடும். கோட்டூர்புரம் போலீஸார் முதல் தகவல் அறிக்கை தயாரித்த பின் அது இணையதளத்தில் பதிவாகி விட்டது. பின் அது முடக்கப்பட்டது. அதன் விவரங்களை சிலர் எடுத்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்ட பின் சிட்டிசன் போர்ட்டலில் இருந்து 14 பேர் அதனை பார்த்துள்ளனர். முடக்கப்பட்ட பின் அதனை எப்படி பார்க்க முடியும். என்.ஐ.சி.யிடம் இதுபற்றி கேட்ட போது, ஐ.பி.சி யில் இருந்து பி.என்.எஸ். சட்டத்துக்கு மாற்றிய போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியாகி விட்டது. போலீசார் முதல் தகவல் அறிக்கையை கசியச் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. காவல் துறை கசியவிடவில்லை. இது சம்பந்தமாக விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாப்பது காவல் துறையின் பொறுப்பு. பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இந்த பொறுப்பு உள்ளது. எப்.ஐ.ஆர்.ஐ கசிய செய்த 14 பேருக்கு எதிராக விசாரணை நடக்கிறது. குற்றத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை பொறுத்தவரை, குற்றவாளியின் போன் அழைப்புகளை சரிபார்த்த போது, அது ஏரோ ப்ளேன் மோடில் இருந்தது. தனக்கு பின் பெரிய குழு இருக்கிறது என காட்டுவதற்காக போன் பேசுவது போல் செய்திருக்கிறார். காவல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பை நடத்த முடியும். இதுவரை நடந்த விசாரணையில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரிய வந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார். ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை. விசாரணை ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது. அதிகாரிகள் பணி விதிகள் படி, செய்தியாளர்களை சந்திக்க அரசு அனுமதி தேவையில்லை; அதற்கு எந்த தடையும் இல்லை. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் அலுவல் ரீதியாக செய்தியாளர்களை சந்திக்கலாம். தனிப்பட்ட முறையில் தான் செய்தியாளர்களை சந்திக்க முடியாது. எவரையும் காவல் துறை பாதுகாக்கவில்லை என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கவே காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்.

முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் ஆணி வேர் வரை விசாரணை நடத்தப்படும். துரதிருஷ்டவசமான இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலைக்கழக வளாத்திற்கு 8 வழிகள் உள்ளன. அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் எப்ஐஆர் பதிவேற்றம் செய்தவர்கள் யார் என அறியும் வசதி இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? 14 பேரிடம் விசாரணை நடத்தும் நிலையில் எஃப்ஐஆர் கசியவில்லை என எப்படி கூற முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. முதல் தகவல் அறிக்கையில் உள்ள வார்த்தைகளும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். எஃப்ஐஆரில் மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. எஃப்ஐஆர் வெளியாவது புகாரளித்தவரின் சுதந்திரத்தை பறிக்கும். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவி படிப்பை தொடர அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். வரிடம் எந்த தேர்வு கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. புாதிக்கப்பட்ட மாணவி தொடர்ந்து படிப்பை முடிக்க நடவடிக்கை வேண்டும். மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை டிஜிபி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.