விஜயகாந்த் நினைவு பேரணிக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

தேமுதிக அமைதிப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். “இதை ஊதிப் பெரிதாக்க வேண்டாம்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தேமுதிக கட்சியினர் சார்பில் அமைதி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி கேட்டனர். கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், காவல்துறையினர் இந்த பேரணிக்கு அனுமதி மறுத்தனர். இதனால் தேமுதிகவினர் பேரணி நடத்த அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், கோயம்பேட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த தேமுதிக தொண்டர்கள், பேரணிக்கு அனுமதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர். முறையாக தேர்தல் ஆணையத்தில் இருந்து பேரணியாக வருவதற்கு நாங்கள் அனுமதி கேட்டு இருந்தோம். நாங்கள் கடிதம் கொடுத்தது டிசம்பர் 5. ஆனால் எங்களுக்கு மறுப்புச் செய்தி கொடுத்தது நேற்று மாலை 4 மணிக்கு. நாங்கள் கொடுத்த கடிதத்திற்கு பிறகு 5 அல்லது 6 நாட்களில் பதில் கொடுத்திருந்தால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகி இந்த பேரணிக்கு அனுமதி பெற்றிருப்போம். வேண்டுமென்றே திட்டமிட்டு காவல்துறை நேற்று எங்களிடத்தில் அனுமதி மறுப்பு என்ற செய்தி கொடுத்து இருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு நல்ல மனிதர் நாட்டுக்காக வாழ்ந்த மனிதர்; எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்த மனிதர் எத்தனையோ தான தர்மங்களை செய்து மனிதர் கேப்டன் விஜயகாந்த். முதல்வர் மாநகர ஆணையருக்கும் இங்கு இருக்கும் டிசிக்கும் உத்தரவை போட்டு பேரணியை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பார்த்தசாரதி மைக்கிலேயே பேசினார்.

அதைத்தொடர்ந்து, காவல்துறையினர் தடையை மீறி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் பேரணி நடைபெற்றது. தேமுதிகவின் புரட்சி தீபம் ஏற்றப்பட்டு, அதை கையில் ஏந்தியவாறு பிரேமலதா பேரணியில் பங்கேற்றார். இந்த பேரணியில் விஜயகாந்த் பாடல்கள் ஒலிக்க விட்டபடி தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் ஆரவாரமாக பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியில் விஜயகாந்தின் மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். விஜயகாந்த் நினைவிடம் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகம் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி நடைபெற்றது. இதனால் கோயம்பேடு வரும் பேருந்துகள் மேம்பாலத்தின் மீது அனுப்பப்பட்டன. இந்த பேரணி சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.

விஜயகாந்த் நினைவிடத்திற்கு அமைச்சர் சேகர்பாபு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக சார்பில் குரு பூஜையில் கலந்து கொள்ள முதல்வர் அனுப்பியுள்ளார். கேப்டன் திரையுலகில் பலரை அறிமுகம் செய்துள்ளார். கலைஞருக்கு விழா எடுத்து, தங்கப் பேனா வழங்கி சரித்திரம் படைத்தவர். கலைஞர் மறைவுக்கு விஜயகாந்த் கண்ணீர் சிந்தியது என்றைக்கும் மறக்க முடியாதது. கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு செய்தி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக அஞ்சலி செலுத்தியதோடு, அரசு மரியாதை செலுத்த உத்தரவிட்டார். விஜயகாந்த் மீதான மாறாத பற்றின் காரணமாக முதலமைச்சர் அமைச்சரை அனுப்பி வைத்துள்ளார்.” என்றார்.

பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “அவர்கள் நினைத்தபடி பேரணி நடந்திருப்பதை நீங்கள் அனைவரும் பார்த்துள்ளீர்கள். முதலமைச்சர் குருபூஜையின் மீதும் விஜயகாந்த் மீதும் கொண்டிருக்கின்ற பற்றின் காரணமாக அமைச்சரான என்னை நேரடியாக அனுப்பி அவர் குருபூஜையில் நான் பங்கேற்று இருக்கிறேன். ஆகவே இதை ஊதிப் பெரிதாக்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.