ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பொருத்த வேண்டும் என்று மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் சங்கீதா தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், ஏறு தழுவுதல் அரங்கம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள், கிராம விழா குழுவினருடன் ஆய்வுக்கூட்டம் நேற்று (டிச.27) ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட எஸ்.பி அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துத்துறை அதிகாரிகள், கிராம விழாக்குழுவினர், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஆட்சியர் மா.செள.சங்கீதா கூட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது, “தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். காளைகளை அடக்கும்போது கொம்புகள் குத்தி உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகளை அணிவிக்க வேண்டும். கடந்தாண்டு நாம் கடைபிடிக்கவில்லை. இந்தாண்டில் நாம் அதை கடைபிடிக்க வேண்டும். இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்று பேசினார்.
அப்போது அமைச்சர் பி.மூர்த்தி, “அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்து ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் காளைகளின் கொம்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதற்கேற்றவாறு பொருத்துவது மிகவும் கடினம். இருந்தாலும் அதைப் பொருத்த நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.
அதற்கு விழாக்கமிட்டியினர், “ஜல்லிக்கட்டு என்பது வீர விளையாட்டு. அதில் கொம்புகளுக்கு கவச உறை என்பது ஏற்க முடியாது” என்றனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் “அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.” என்றார். பின்னர் ஆட்சியர், அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு விழாக்கமிட்டியினரின் கருத்துகளை தெரிவிக்குமாறு கூறினார்.
இதைத்தொடர்ந்து, அலங்காநல்லூர் விழாக்கமிட்டியினர் கூறுகையில், “உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாடிவாசலில் அவிழ்த்துவிடும் காளைகளின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காளைகளை ஏற்றவாறு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதனால் பல காளைகள் அவிழ்த்துவிட முடியாத நிலை உள்ளது” என்றனர். அதற்கு அமைச்சர், “ஆன்லைனில் பதிவு செய்வதை தடுக்க முடியாது. குறித்த நேரத்துக்குள் எவ்வளவு அவிழ்த்துவிட முடியுமோ அத்தனையும் அவிழ்த்துவிடுகிறோம்” என்றார்.
அவனியாபுரம் கிராமத்தினர், “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும்” என்றனர். அதற்கு ஆட்சியர், “அதற்கான தேவை ஏற்படவில்லை. தேவைப்பட்டால் அமைக்கப்படும்.” என்றார்.
பாலமேடு கிராமத்தினர், “உள்ளூர் காளைகளை அவிழ்த்துவிட முடியவில்லை என கிராம மக்கள் வருத்தப்படுகின்றனர்” என்று கூறினர். அதற்கு அமைச்சர், “அனைத்து துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு கடந்தாண்டைவிட சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நேரடியாக பேசி தீர்வு காணலாம். இந்த கூட்டத்தில் வெளிப்படையாக பேச வேண்டும். நீங்கள் சொல்லும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்” என்றார்.
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு கடந்தாண்டை விட சிறப்பாக நடத்தப்படும். இதில் தமிழக முதல்வர், துணை முதல்வர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் வாயிலாக முன்பதிவு நடைபெறும், அரசு சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு மூன்று ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் தமிழக அரசின் சார்பில் எந்த ஒரு பரிசுகளும் வழங்குவதில்லை, ஒவ்வொரு ஊரிலும் நன்கொடையாளர்கள் வழங்க கூடிய பரிசுகள் காளை உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்படும்.
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அரங்கில் போட்டி நடைபெறக்கூடிய தேதி பின்னர் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்படும், சாதி பெயரில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்க கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, அதன்படி கடந்தாண்டு சாதி பெயரில் காளைகள் அவிழ்க்கப்படவில்லை, அதே போல இந்த ஆண்டும் ஜல்லிகட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.