அம்பேத்கர் பெயரை 1000 முறை உச்சரித்த திருமாவளவன் போராட்டம்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித்ஷாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் திருமாவளவன் அம்பேத்கர் பெயரை 1000 முறை உச்சரித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதானி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பியிருந்தன. மறுபுறம் அரசியலமைப்பு தின விவாதமும் நடந்தது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசியிருந்த எதிர்க்கட்சிகள், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மத்திய அரசு மாற்ற முயற்சிப்பதாக கடுமையாக சாடியிருந்தன. எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசி முடித்த பின்னர் அவர்களது விமர்சனங்களுக்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது, “அம்பேத்கர், அம்பேத்கர் என்று முழக்கமிடுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” என்று பேசியிருந்தார்.

அமித்ஷாவின் இந்த கருத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்தியில் கடும் எதிர்வினையை கிளப்பியது. அரசியலமைப்பை உருவாக்கியதே அம்பேத்கர்தான். ஆனால், அவரது பெயரை உச்சரிப்பதற்கு பதில் கடவுள் பெயரை சொல்ல வேண்டும் என்று கூறுகிறாரே? என்று காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல், விசிக என அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், அமித்ஷாவை கண்டித்து, அம்பேத்கர் பெயரை 1000 முறை உச்சரிக்கும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இதனையடுத்து சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றிருந்த திருமாவளவன் உட்பட விசிகவினர் அம்பேத்கர் பெயரை உச்சரித்து, அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.