மாமனிதன் விஜயகாந்துக்கு இது மிகப்பெரிய அவமதிப்பு: சீமான்!

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தடையை மீறி இன்று பேரணி நடைபெற்றது. இந்நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “மாமனிதன் விஜயகாந்துக்கே இது பெரிய அவமதிப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் கலங்க வைத்தது. மறைந்த விஜயகாந்த் உடலுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்திற்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் சென்று அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு செய்தது. இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் என அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி திட்டமிடப்பட்ட தேமுதிக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பேரணியால் போக்குவரத்து பிரச்சனை ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுத்த காவல்துறையினரோடு, தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அனுமதி மறுக்கப்பட்டதால், தடையை மீறி தேமுதினவினர் பேரணியை நடத்தினர்.

இந்நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான் கூறியதாவது:-

விஜயகாந்தின் நினைவு தினத்தை முன்னிட்டு நடக்க இருந்த மவுன ஊர்வலத்திற்கு, அனுமதி மறுத்திருப்பது அவசியமற்றது. நினைவை போற்றும் வகையில் நடக்கும் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் தான் நடைபெறும். அப்படி இருக்கும்போது அதனை அனுமதித்திருக்க வேண்டும். அனுமதி மறுப்பு என்பது அவ்வளவு பெரிய மகத்தான மனிதருக்கு மிகப்பெரிய அவமதிப்பு. சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிந்தே பல இடங்களில் அனுமதி கொடுத்த அரசு, இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்திருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து.

விஜயகாந்த் எல்லோரிடமும் அன்பு செலுத்தக் கூடியவர். தான் கஷ்டப்பட்டது போல மற்றவர்கள் கஷ்டப்படக்கூடாது என நினைத்தவர் கேப்டன் விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு பெரும் ஆளுமைகள் இருக்கும்போதே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள் தான். மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். அவர் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டவர். அவரால் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு. ஆனால், அவரால் வீழ்ந்தவர்கள், ஒருவர் கூட இருக்க முடியாது. எல்லோரிடமும் சமமாக பழகக் கூடியவர். இன்னும் 10 ஆண்டுகள் அவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழகத்தில் பெரிய ஆற்றலாகவும், மாற்று அரசியலையும் உருவாக்கியிருப்பார். தமிழக மக்கள் அதனை இழந்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சீமான் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்!

இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர்!

தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவித்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை!

ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக் கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி!

எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் பழகிய பண்பாளர்!

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஐயா விஜயகாந்த் அவர்களது நினைவு நாளில் அவரது நற்செயல்பாடுகளைப் போற்றி, என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.