திமுக அரசைக் கண்டித்து பாக மாநில தலைவர் அண்ணாமலை சவுக்கடி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், உங்களை நீங்களே கலாய்த்து கொண்டால் நாங்கள் என்ன செய்வது, கலாய்க்க மனம் வரவில்லை என்று அந்தப் போராட்டம் குறித்து பேசிய தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த முத்துகவுண்டன்புதூரில் திமுக கோவை மண்டல ஐடி விங் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக ஐடி விங் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் கலந்துகொண்டு ஐடி விங் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தை திமுக 100 சதவீதம் வென்றெடுக்கும். மற்ற மாவட்டங்களிலும் இதேபோல திமுக வென்றெடுக்க வேண்டும். இதற்கு ஐடி விங் நிர்வாகிகளின் உதவி அவசியம். தேர்தல் வெற்றிக்காக ஐடி விங் நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், புதிதாக வந்துள்ள சர்க்கஸ் கூடாரத்திற்கு ஈடு கொடுப்பதற்காக மற்றொரு சர்க்கஸ் கம்பெனியைச் சேர்ந்த கோமாளிகள் புதிய வேடங்களை போடுகின்றனர். இது நகைப்பை ஏற்படுத்தினாலும், அவர்களை அவர்களே கலாய்த்து கொள்ளும் செயல்களை செய்து வருகிறார்கள். அதனால் அவர்களை கலாய்க்க கூட மனம் வரவில்லை. 6 சவுக்கடிகள் என்பது என்ன என்று புரியவில்லை . ஜெய் ஸ்ரீ ராம் சொல்பவர்கள் 108 திவ்ய தேசங்கள் தொடங்கி காசி வரை சென்று அங்கெல்லாம் சவுக்கடி கொடுத்துக் கொள்ளட்டும். ஆனால் அண்ணாமலை இங்கே இருந்தால்தான் எங்களுக்கு கன்டென்ட் கிடைக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்டை அமைச்சர் செந்தில் பாலாஜி பிரியாணி செய்துவிட்டார். அதில் நான் தம் மட்டும் தான் கொடுத்தேன் என்றார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசியதாவது:-
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் குறித்த கேள்விக்கு, இதுபோன்ற போராட்டங்களை தவிர்க்க வேண்டும். இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது. மேலும் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து உள்ளது.
பாலியல் வழக்கில் தொடர்புடைய நபர் அரசியல் பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்தது தொடர்பான கேள்விக்கு, பொது வாழ்வில் இது போன்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது தவிர்க்க முடியாது என பதிலளித்தார். மாணவியின் பாலியல் வழக்கு சிபிஐ-க்கு மாற்ற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, இந்த விவகாரத்தை அரசியலாக்கி லாபம் தேட முயற்சிப்பது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற நேரத்தில் அனைத்து இயக்கங்களும் ஒன்றாக சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துணை நிற்க வேண்டும். முதல்வருக்கு மக்களிடையே கிடைக்கும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் இது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும். புது சர்கஸ் கம்பெனி வந்தால், பழைய சர்கஸ் கம்பெனி கோமாளிகள் புது வேடம் போடுவார்கள். சமீபத்தில் புது சர்கஸ் கம்பெனி வந்திருப்பதால், அது இந்த கோமாளிக்கு தாங்க வில்லை என தவெக கட்சியையும், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையையும் சூசகமாக குறிப்பிட்டு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசினார்.