தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
மேலும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெல்வதை இலக்காக கொண்டு செயலாற்றுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்கம், மினி டைடல் பூங்கா திறப்பு, தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வந்த முதலமைச்சர் விமான நிலையத்தில் இருந்து சத்யா ரிசார்ட் சென்று அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார். பிறகு, டைடல் பூங்காவில் புதிய நிறுவனங்களுக்கு இட ஒப்பந்த ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த மினி டைடல் பூங்கா தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானாவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இப்பூங்காவானது வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.
சுமார் ரூ. 32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா மேலும் ஒரு மைல்கல் திட்டமாக வடிவெடுத்துள்ளது.