மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்துத்தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையில் அடித்துக் கொண்டிருக்கிறார் என்று திமுக செய்தி தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டதை திமுக விமர்சித்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் திமுக செய்தி தொடர்புத்துறை தலைவரும், முன்னாள் எம்.பியுமான டிகேஎஸ் இளங்கோவன். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் வேண்டுமென்றே திமுக மீது களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள். குற்றவாளியை உடனடியாக கைது செய்துவிட்டார்கள். கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவி குறித்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்பது தெளிவாகி உள்ளது. இந்த வழக்கில் பின்பு வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை.
அண்ணாமலை திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக சாட்டையடி போராட்டம் நடத்தவில்லை. மாறாக எல்.முருகன் கையில் வேலுடன் நடந்த பின்பு அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைத்தது போல தனக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டுள்ளார்.
கர்நாடகாவில் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட போது அங்கு காவல் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. கெளரி லங்கேஷ் கொலை குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கெளரி லங்கேஷை கொலை செய்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.