இரவும் பகலும் அயராது உழைத்து விஜய்யை முதல்வர் ஆக்குவோம். நாம் அனைவரும் ஒன்று பட்டு பணியாற்றி அவருக்கு ஆதரவு திரட்டி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று புஸ்சி ஆனந்த் கூறினார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி மற்றும் திட்டங்கள் பற்றி தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அனைத்து கூட்டங்களிலும் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஆரணி, போளூர், வந்தவாசி, கலசப்பாக்கம், கிழ்பெண்ணாத்தூர் ஆகிய தொகுதிகளுக்கான தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை நிலையச் செயலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் உதயகுமார், சத்யா மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ளன. எனவே நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து இரவு பகல் பாராமல் அயராது உழைத்து கட்சித் தலைவர் விஜய்யை தமிழகத்தின் முதல்வராக ஆக்குவோம்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தலைவர் விஜய் சுட்டிக்காட்டிய அனைத்து வேட்பாளர்களையும் நாம் அனைவரும் ஒன்று பட்டு பணியாற்றி அவருக்கு ஆதரவு திரட்டி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அனைத்து பணிகளிலும் கட்சி தோழர்கள் தீவிரமாக பணியாற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். கட்சித் தலைவர் விஜய் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வதோடு மக்கள் பணிகளையும் எப்போதும் போல் சிறப்பான முறையில் செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.