அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பழையனவற்றை போக்கி வீட்டைத் தூய்மைப்படுத்தும் நாளான போகித் திருநாள், இயற்கைக்கு நன்றி செலுத்தும் திருநாள், அரும்பணி புரிந்த மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாள், நண்பர்களும், உறவினர்களும் கண்டு மகிழும் நாள் என நான்கு நாட்கள் பொங்கல் விழாவினை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், பொங்கல் பரிசு வழங்குவதில் பல குளறுபடிகள் ஏற்பட்டன. உதாரணமாக, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2022-ம் ஆண்டு பொங்கல் திருவிழாவின்போது 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்து, இதில் பாதி பொருட்கள்கூட விநியோகம் செய்யப்படவில்லை என்றும், விநியோகம் செய்யப்பட்ட பொருட்களும் பயனற்றவையாக இருந்தன என்றும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்தப் பொருட்களை சாப்பிட்டு பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது என்பதையும் இந்த நாடு அறியும்.
இதனைத் தொடர்ந்து, 2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், 2022-ம் ஆண்டு செய்த தவறுக்கு பரிகாரம் காணும் வகையில் 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.
2024 ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு வழங்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், நான் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையிலும், 2024-ம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டும், ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், பாதிக்கும் மேற்பட்டோருக்கு 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படவில்லை.
தற்போது, 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பெஞ்சல் புயல், அதிகனமழை உள்ளிட்டவற்றால், அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடமைகள் எல்லாம் கடுமையாக சேதமடைந்துள்ளன. தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகைக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதன்மூலம் ஏற்பட்ட இழப்பினை சரி செய்வதற்கே அவர்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவைப்படும். இதனால் தமிழக மக்கள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். இந்த நிலையில், தி.மு.க. அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பின்மூலம், பொங்கல் திருநாளை விமரிசையாக கொண்டாட முடியாத நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக மக்கள் 2025 பொங்கல் திருநாளை சிறப்புற கொண்டாடும் வகையில், எவ்வித பாகுபாடின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை வழங்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.