தமிழக பாஜக என்னை புறக்கணிக்கிறது: குஷ்பு!

தமிழக பாஜக நடத்தும் நிகழ்ச்சிகளில் என்னை அழைக்காததால் நான் கலந்து கொள்ளவில்லை என்றும் என்னை ஏன் அழைப்பதில்லை என்பதை கட்சித் தலைவர் அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும் என்றும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து குஷ்பு வெளியிட்டுள்ள ஒரு ஊடகத்தின் தொலைபேசி உரையாடல் ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

பாஜக நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்காததால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ஒரு தகவல் வருகிறதே என செய்தியாளர் கேட்கிறார். அதற்கு குஷ்பு, “என்னை கூப்பிடுவதில்லை, நான் பங்கேற்பதில்லை. என்னை ஏன் கூப்பிடவில்லை என்பதை கட்சித் தலைவர் அண்ணாமலை, கட்சி நிர்வாகிகளிடம்தான் கேட்க வேண்டும்” என கூறியிருக்கிறார். இந்த பேட்டியை தனது தளத்தில் பதிவிட்டுள்ள அந்த ஊடகம், இந்த தொலைபேசி உரையாடல் ஆடியோவானது குஷ்புவின் ஒப்புதலுடன் பதிவிடப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து குஷ்பு சுந்தர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், எனது அனுமதி இல்லாமல் என் பேச்சை ரெக்கார்டு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. ஆனால் நான் பேசியது உண்மைதான். பாஜக நிகழ்ச்சிகளில் ஏன் உங்களை பார்க்க முடிவதில்லை என நிறைய பேர் கேட்கிறார்கள். அதற்கு பதில் ஒன்றுதான், என்னை யாரும் அழைப்பதில்லை, அப்படியே அழைத்தாலும் கடைசி நிமிடத்தில் அழைக்கிறார்கள்! எப்படி செல்ல முடியும்? என்னை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை என்பதால் நான் கட்சியை விட்டு விலகமாட்டேன். என்னால் முடிந்த அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களை மக்கள் முன் கொண்டு சேர்க்கும் பணியை செய்வேன் என அந்த ஊடகத்தை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு திரைத்துறையில் சாதித்திருந்த நிலையில் அரசியலில் கடந்த 2010ஆம் ஆண்டு வந்தார். திமுகவில் இணைந்து கட்சி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திமுகவில் ஏற்பட்ட மனக்கசப்பால் கடந்த 2014 ஆம் ஆண்டு கட்சியை விட்டு விலகினார். இதைத் தொடர்ந்து குஷ்பு காங்கிரஸ் கட்சியில் அதன் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இணைந்தார். இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்ததும் அவருக்கு பாஜக செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு தோல்வியை சந்தித்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கட்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை என கூறி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை கடந்த ஆகஸ்ட் மாதம் குஷ்பு ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த நிலையில் அண்மைக்காலமாக பாஜக நடத்திய எந்த நிகழ்ச்சியிலும் குஷ்பு கலந்து கொண்டதே இல்லை. இதனால் அவர் பாஜக மீது அதிருப்தியில் இருக்கிறாரா, இல்லை பாஜகவே அவரை ஓரம்கட்டிவிட்டதா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்த கேள்விகளுக்கு குஷ்புவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். பாஜக நடத்தும் நிகழ்ச்சிகளில் தன்னை அழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் அவர் கட்சியிலிருந்து விலகுவாரா என எதிர்பார்த்த நிலையில் கட்சியில் இருந்து விலகாமல் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் முன்வைப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.