‘பாப்கானில் உப்பு போட்டதற்கு ஒரு வரி; போடாததுக்கு வேறொரு வரியென உலகத்திலேயே விந்தையான ஜிஎஸ்டி இந்தியாவில் மட்டுமே உள்ளது’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது:-
மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது செய்த பொருளாதார சீர்த்திருத்தம் புரட்சிகரமானவை. நம் நாட்டில் 20 கோடி முதல் 30 கோடி வரை மத்திய வர்க்க மக்கள் உருவானதற்கு அவரது கொள்கைதான் காரணம். அதற்கு முன் ஏழை, பரம ஏழைகள் தான் இருந்தனர்.
ஏற்கெனவே பின்தங்கிய மக்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தந்த மாநில சூழ்நிலை, முறையான கணக்கெடுப்புக்கு பின்னரே உள்ஒதுக்கீட்டை பெறலாம். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி செயல்பட்டால் உள்ஒதுக்கீடு கிடைக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சாசனத்துக்கு முரணானது. அதை இண்டியா கூட்டணி தோற்கடிக்கும்.
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கிறோம். இச்சம்பவத்துக்கு அங்கு துணைவேந்தர் இல்லாததும் ஒரு காரணம். ஆறு பல்கலை.களில் துணைவேந்தர்கள் இல்லாதது வருத்தத்தை தருகிறது. ஆளுநர் தனது வரம்புக்குள் இருக்க வேண்டும். அரசுதான் துணைவேந்தர்களை நியமியக்க வேண்டும். மாநிலங்களில் இரட்டை அரசு நடத்த முடியாது. ஆளுநர்கள் வரம்பு மீறி செயல்படுவதால் சிக்கல் ஏற்படுகிறது. அண்ணாமலை சாட்டையால் அடித்து கொண்டதற்கு இங்கிலாந்தில் கற்று கொடுத்த பாடம்தான் காரணம். மத்திய அரசு வயநாடு பேரிடருக்கு செலவழித்த தொகையை கேட்பது மற்றொரு பேரிடர்தான்.
காங்கிரஸ் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக செயல்படவில்லை என்று கூற முடியாது. பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 கொடுக்காதது தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்காது. கட்சி, கூட்டணி மீதான நம்பிக்கையில்தான் வாக்களிப்பார்கள். 2026-ம் ஆண்டு திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெறும்.
அனைத்து மாநிலங்களிலும் அன்றாடம் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதனால், தமிழகத்தில்தான் குற்றங்கள் அதிகம் என்று கூற முடியாது. தேசிய குற்றப்பதிவேடு பிரிவில் உள்ள புள்ளிவிவரத்தை பார்க்க வேண்டும். நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுத்ததை வரவேற்கிறேன். பொது இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். குற்றங்களை தடுக்க வேண்டியது. குற்றவாளிகளை கைது செய்வது போன்றவைக்கு அரசு தான் பொறுப்பு. அதை அரசு தட்டிக்கழிப்பதை ஏற்க மாட்டோம்.
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையால் மாநில அரசு பள்ளிகளில் மட்டுமே இந்தி இல்லை. ஆனால் தனியார் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி உள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேர் இந்தி தேர்வுகளை எழுதுகின்றனர். இந்தி படிக்கக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை.
உப்பு போட்ட பாப்கார்னுக்கு ஒரு வரி; உப்பு போடாத பாப்கார்னுக்கு வேறு வரி என உலகத்திலேயே விந்தையான ஜிஎஸ்டி இந்தியாவில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் ஜிஎஸ்டி சட்டமே தவறு. காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் தமிழுக்காக நூலகம் கட்டி கொடுத்துள்ளோம். இது சிவகங்கை மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை திறக்க ஜன.21-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.