2024-2025 இரண்டாம் அரையாண்டு முதல் தொழில் வரி உயர்வு அமல்படுத்த நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வகை வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரியை 35 சதவீதம் வரை உயர்த்தவும் அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசு ஒப்புதல் கொடுத்தவுடன் இந்த வரி உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 25 சதவீதத்திற்கு குறைவில்லாத வகையிலும் 35 சதவீதத்திற்கு அதிகமாக அமலும் இருக்க வேண்டும் எனவும் தொழில் வரி விகிதம் 2500க்கு மிகாமலும், இருக்க வேண்டுமென விதிப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்த நிலையில் வரி உயர்வு அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. மாத வருமானம் 21 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள கடைகளுக்கு வரி உயர்வு இல்லை எனவும், 21,000 முதல் 30,000 வரை வருமானம் உள்ள நபர்களுக்கு 180 ரூபாயாகவும், 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு 430 ரூபாய் ஆகவும், 45 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் உள்ள நபர்களுக்கு 930 ரூபாயாகவும் வரி உயர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னை பெருநகர மாநகராட்சி சென்னைவாழ் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக சுமார் 35 சதவீத தொழில்வரி உயர்வை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
2024-2025 இரண்டாம் அரையாண்டு முதல் தொழில் வரி உயர்வு அமல்படுத்த நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 44 மாத கால விடியா திமுக-வின் முக ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சென்னை மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜ் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, வடபழனி-போரூர் சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, இசிஆர் சாலை, ஓஎம்ஆர் சாலை, என்று அனைத்து முக்கிய சாலைகளுமே குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. அனைத்து முக்கியச் சாலைகளின் நிலையே இப்படியெனில், மாநகரில் உள்ள மற்ற சாலைகளின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதனால் நாள்தோறும் சாலை விபத்துக்கள் நடந்தவண்ணம் உள்ளன.
ஏற்கனவே சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும், இவற்றோடு குப்பை வரி, கட்டிட வரைபட கட்டணங்கள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த தொழில்வரி உயர்வினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வணிகர்கள் என்று சுமார் 75 சதவீத மக்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலை உருவாகியுள்ளது. மக்களின் சுமையை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.