புத்தாண்டை முன்னிட்டு உங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது லிங்கை பற்றி செய்தி வருகிறது. அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று கன்னியாகுமரி மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.
இன்னும் சில மணி நேரத்தில் புத்தாண்டு பிறக்க போகிறது. 2025ம் ஆண்டு பிறக்க போகிறது. இதனால் இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. பலரும் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மெரினா மொத்தமும் மக்கள் வெள்ளத்தில் கிடக்கிறது. இதேபோல் கோவை, மதுரை, கன்னியாகுமரி, உள்பட பல்வேறு நகரங்களில் மக்கள் புத்தாண்டை வரவேற்க பூங்காக்களிலும், கடற்கரையிலும் குவிந்துள்ளார்கள்.
புத்தாண்டு பிறந்த உடன் பலர் பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். கேக் வெட்டி கொண்டாடுவார்கள். பலர் ஆடல், பாடல், படித்த உணவு என உற்சாகமாக இருப்பார்கள். பலரும் மொபைல்களில் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பிடித்த வாசகங்களுடன் புத்தாண்டு வாழ்த்து அனுப்புவார்கள். அப்படி அனுப்பும் போது, ஏதாவது லிங்கை அனுப்பினால் கிளிக் செய்துவிட வேண்டாம். இதேபோல் தெரியாத எண்ணில் இருந்து புத்தாண்டு வாழ்த்து அனுப்ப apk file லிங்கை கிளிக் செய்யுமாறு வந்தால் தொட்டுவிட வேண்டாம்.. அப்படி செய்து பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:-
புத்தாண்டை முன்னிட்டு உங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது லிங்க் செய்தி வரும். அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் குறிப்பிடப்பட்டு இருக்கும். நீங்கள் அந்த apk File ஐ டவுன்லோடு செய்துவிட்டால் உங்கள் செல்போன் உடனடியாக hack செய்யப்பட்டு உங்கள் வங்கி கணக்கு தொடர்பான விவரங்கள் திருடப்பட்டு பணமோசடி செய்து விடுவார்கள். எனவே வாட்ஸ் அப்பில் வரும் இதுபோன்ற புத்தாண்டு apk file அல்லது லிங்கைஐ தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பணமோசடி நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்யலாம். இவ்வாறு போலீசார் கூறியுள்ளார்கள்.