நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேசியதெல்லாம் பேசிவிட்டு தம்மிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார் என டிஐஜி வருண்குமார் கூறியதற்கு நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
நேற்று திருச்சியில் வருண்குமார் என்பவர் தனிப்பட்ட முறையில் (அதிகாரியாக வரவில்லை என அவரே சொல்கிறார்) அண்ணன் சீமான் அவர்கள் குறித்து பொதுவெளியில் பொய்யான தகவல்களை பரப்பி இருக்கிறார். தொழிலதிபர் மூலமாக அண்ணன் சீமான் அவர்கள் தனக்கு செய்தி அனுப்பியதாக சொல்லும் வருண்குமார், யார் அந்த தொழிலதிபர் என்பதைச் சொல்வாரா? மைக் கிடைத்தால் என்ன வேண்டுமென்றாலும் பேசுவீங்களா வருண்? நாம்தமிழர் கட்சிக்கும் உங்களுக்கும் மோதல் என சொல்றீங்க? 36 லட்சம் மக்களால் வாக்கு செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநில கட்சி மாவட்ட கண்காணிப்பாளரை எதற்கு எதிர்க்க வேண்டும்? உங்களின் பொய் வழக்குகளும் வழக்கின் போது பறிக்கப்பட்ட அலைபேசிகளை வைத்து நீங்கள் செய்யும் மூன்றாம் தர வேலைகளையும் பொது சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது!
நீங்கள் போன அதே நீதிமன்றத்தில் நீங்கள் எங்களுக்கு எதிராக செய்த மூன்றாம் தர வேலைகளை ஆதாரத்துடன் ஆவணப்படுத்துகிறோம்! சட்டமும் நீதியும் யார் பக்கம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்! மற்றபடி மன்னிப்பு என்பது அண்ணன் சீமானின் வரலாற்றிலேயே கிடையாது யார் தூது விட்டது?யார் கெஞ்சியது? யார் பத்திரக்கையாளர்களை அனுப்பி பேசியது? என்பதை விலாவாரியாக பேசுவோம்! இவ்வாறு சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருச்சி எஸ்.பியான தற்போதைய டிஐஜி வருண்குமார், திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், தம்மை பற்றியும் தமது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் சீமான் அவதூறாக பேசியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜராகி இருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி வருண்குமார், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கும் தமக்குமான மோதல் குறித்து விரிவாக விவரித்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியினர் என் குடும்பத்தை அவதூறாகவும், ஆபாசமாகவும் அவதூறு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனை சீமான் கண்டிக்காமல் இருந்தார். அப்படி பதிவிட்டவர்களை நாங்கள் கைது செய்த போதும் எங்களைத்தான் சீமான் விமர்சித்தார். சீமானுக்குதான் சுயமரியாதை கிடையாது; எங்களுக்கு சுயமரியாதை உள்ளது. அதனால்தான் வழக்கு தொடர்ந்தோம். நான் ஓய்வு பெற்றாலும் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவேன். சீமான் மைக் முன்பு பேசினால் புலி போல் பேசுகிறார்.. ஆனால் பேசியதெல்லாம் பேசிவிட்டு தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார் சீமான். இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. சீமான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே நான் கூறியிருந்தும் சீமான் அதனை செய்யவில்லை. இனி சீமான் பொதுவெளியில் மன்னிப்பே கேட்டாலும் ஏற்கப் போவது இல்லை என்றார்.