சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவியின் வழக்கு விசாரணையை திசை திருப்பும் வகையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திமுகவின் ஸ்டாலின் மாடல் நிர்வாகத் திறனற்ற அரசின் உயர்கல்வித் துறை மந்திரி கோவி. செழியனும், மற்றொரு பெண் மந்திரி உட்பட மந்திரி பிரதானிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமியின் நேரடியான கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை திசை திருப்பும் வகையில், ‘சார் யார்? என்று இல்லாத ஒன்றை கேட்டு அரசியல் ஆதாயம் தேடுவதாக’ திசை திருப்புகிறார்கள்.
ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி, தன்னுடைய புகாரில் குற்றவாளி சாரோடு அட்ஜெஸ்ட் செய்து போ என்று தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளதே! அதிமேதாவி மந்திரி இதனை மறுக்கிறாரா? மந்திரியின் அறிக்கை இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவிற்கு, இப்படித்தான் விசாரிக்க வேண்டும் என்று வழிகாட்டுவதுபோல் உள்ளது. இது, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும், உத்தரவையும் மீறுவதாகும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை திமுக அரசு பதிவு செய்யாமல், காலதாமதம் செய்த காரணத்தினால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து, CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து, பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடிய கேவலம், நிர்வாகத் திறமையற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில்தான் நடந்தேறியது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களில் ஒருசிலர் புகார் கொடுப்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு கொடூர செயல்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரே ஈடுபடுவதும், அவர்களைக் காப்பாற்ற இந்த ஆட்சியாளர்கள் பல்வேறு தகிடுதத்தங்களை செய்வதும், மெத்தப் படித்த மந்திரி கோவி. செழியன் அளிக்கும் பதில்களில் இருந்தே மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள்.
இந்த திமுகவின் அரசில், உள்துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சரின் ஆட்சியில், முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுடன், போதைப் பொருள் கடத்தல் செய்த திமுக (முன்னாள்) நிர்வாகியின் புகைப்படம்; அதேபோல், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மற்றும் தற்போது காமக்கொடூரன் ஞானசேகரன் புகைப்படம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் கனிமொழி கலந்துகொண்ட கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதே, அதை மறந்துவிட்டாரா இந்த மந்திரி ? ஆளும் கட்சியினரின் அராஜகத்தால், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களோ, மாணவிகளோ, பெற்றோர்களோ காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க முடியாத நிலையே, இன்றும் திமுக ஆட்சியில் நிலவுவதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
அடுத்து, புதுமைப்பெண் திட்டம் பற்றி குறிப்பிட்டுள்ளார். மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான விலையில்லா மடிக் கணினி வழங்கும் திட்டம், மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன மானியத் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் போன்ற பல மகளிர் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டு, புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை என்று நாடகமாடுவதை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் என்பதை மந்திரி அறிந்துகொண்டு பேசவேண்டும்.
எங்கள் ஆட்சியில், அதிகரிக்கப்பட்ட மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ-க்கள் போன்றவைகளால், அம்மாவின் அரசில் உயர்கல்வி படிப்பில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை எண்ணிக்கையை சுமார் 52 சதவீதமாக உயர்த்திக் காட்டி, இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு சென்றவர் அண்ணன் எடப்பாடியார், என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல் நீங்கள், 44 மாதகால நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தொடங்கப்பட்ட புதிய கல்வி நிறுவனங்கள் பற்றியும், மருத்துவக் கல்லூரிகள் பற்றியும் பட்டியலிடத் தயாரா?
அடுத்து, துப்பாக்கிச் சூடு பற்றி டி.வி-யைப் பார்த்து அண்ணன் எடப்பாடியார் தெரிந்துகொண்டார் என்று, மந்திரி கீரல் விழுந்த ஓட்டை ரிக்கார்டு போல் திரும்பத் திரும்பப் பாடுகிறார். அதைப்பற்றி எங்கள் கழகப் பொதுச் செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் பலமுறை தெளிவுபடுத்திவிட்டார்.
உள்ளாட்சித் துறை ஆய்வுக் கூட்டத்தில் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் துறை அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டத்தின் நடுவே இச்சம்பவம் பற்றி, ஊடகங்கள் ஒளிபரப்பு செய்ததைப் பார்த்து, உடனடியாக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதைப் பற்றி ஆலோசனை வழங்கியவர், எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்.
ஊடகத் தொழில்நுட்பம் இமயம் தொட்டுள்ள இக்காலத்தில், உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை ஊடகங்கள்தான் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது என்பதை பொம்மை முதலமைச்சரும், மந்திரிகளும் மறுக்க முடியாது. திமுக-ஆட்சியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்கச் சென்றபோது, காவலர்கள் அவர்களைத் தடுத்து தடியடிப் பிரயோகம் செய்து, தாமிரபரணி ஆற்றில் தள்ளியதால் 18 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை திமுக மந்திரிகள் வசதியாக மறந்துவிட்டார்களா?
எற்கெனவே, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி மாநகர காவல் ஆணையரின் பேட்டி ஒருவிதமாகவும்; உயர்கல்வித் துறை மந்திரியின் கருத்து அதற்கு எதிராகவும் இருந்ததை, எங்களது கழகப் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார். அதைத் தொடர்ந்து, இந்த மந்திரி என்னுடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக சப்பைக் கட்டு கட்டினார். புண்ணுக்குப் புணுகு பூசும் வேலையை இந்த ஆட்சியாளர்கள் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பேட்டி என்ற பெயரில் ‘யார் அந்த சார்’ என்பதை மூடி மறைக்கவும், உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றவும் துடிக்கும் மந்திரி பிரதானிகளுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.