அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து ஜன.3-ல் மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதை கண்டித்தும், தமிழக பாஜக மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.
வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக ஆளுநர் அவர்களைச் சந்தித்து, தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த டிச.27-ம் தேதி தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். தொடர்ந்து தற்போது தமிழக பாஜக மகளிரணி சார்பில் நீதிப் பேரணி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.