தமிழக அரசு ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரை வைத்து ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது: சீமான்!

“தமிழக அரசு என்னோடு மோத வழியின்றி, ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரை நிறுத்தி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. எதற்காக அவருக்கு டிஜிபி பதவி உயர்வு. அதுவும், கணவன் – மனைவி இருவருக்கும் ஹனிமூன் ட்ரிப் போல, திண்டுக்கல் மற்றும் திருச்சியில் பணியமர்த்திப்பட்டுள்ளனர். அனைவருக்கும் பணியிடமாறுதல் வழங்கிய அரசு வருண்குமாரை மட்டும் அதே இடத்தில் பணியமர்த்தி உள்ளது,” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியனரை கைது செய்த போலீஸார் பெரியமேடு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் சீமான் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது:-

ஆயிரக்கணக்கான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்போது, அண்ணா பல்கலை. மாணவி எஃப்ஐஆர் மட்டும் வெளியாவது ஏன்? இந்த ஒரு எஃப்ஐஆருக்கு மட்டும் எப்படி தொழில்நுட்ப பிரச்சினை வந்தது? மத்திய அரசு கூறினால், அதை நாங்கள் நம்ப வேண்டுமா? எந்த குற்றச் செயல்கள் நிகழ்ந்தாலும், சம்பவ இடத்தில் இருக்கும் கண்காணிப்புக் கருவிகள் மட்டும் இயங்காமல் போவது ஏன்? இதுவரை தமிழகத்தில், எங்கு குற்றச் செயல்கள் நடந்தாலும் அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. சுவாதி, ராம்குமார், என பல சம்பவங்களை கூறலாம். மத்திய அரசு ஆஃசிபா, பல்கிஸ் பானு, மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்தி சென்ற சம்பவங்களில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? நல்லாட்சி என்பதை மக்கள் சொல்ல வேண்டும். முதல்வரே சொல்லக்கூடாது.

முதல்வர் படத்தின் மீது காலணி வீசிய பெண்ணைப் பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. அதை வீடியோ பதிவு செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் முதல்வர் படத்தின் மீது காலணி வீசப்பட்டபோது, தமிழகத்தில் யாரும் கண்டிக்கவில்லை. நான் தான் சம்பவத்தைக் கண்டித்தேன். போராட்டம் என்ற பெயரில் நாங்கள் நடத்துவது நாடகம் என்றால், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எத்தனை போராட்டங்களை நடத்தியது, அதற்குப் பெயர் என்ன?

ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரிடம் எதற்காக நான் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவருக்கு பயந்துகிட்டு நான் மன்னிப்புக் கேட்க வேண்டுமா? வருண் குமார் நேருக்கு நேர் நின்று என்னுடன் பேசுவாரா? நாகரிகம் கருதி சில அதிகாரிகள் மற்றும் பத்திரிகையின் பெயர்களை கூற விரும்பவில்லை. அனைவரையும் அனுப்பி, எனக்கும் அவருக்கும் பிரச்சினை வேண்டாம், அதை முடித்துவைக்கும்படி அனுப்பி வைத்தவர் வருண்குமார்.
நான் எதற்காக பேச வேண்டும் என்று கூறி, அங்கிருந்து எழுந்து சென்றவன் நான். துப்பாக்கி, பட்டாலியன் எல்லாம் வைத்துக் கொண்டு ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுவது கேவலமாக இல்லை?

என்னிடம் மோதி தன்னை ஒரு ஆளாக காட்டிக்கொள்ள அவர் நினைக்கிறார். அவர் சரியான ஆண்மகன் என்றால் எனக்கு தண்டனைப் பெற்றுத் தரட்டும். காக்கிச் சட்டைக்குள் மறைந்திருக்கும் குற்றவாளி அவர். அவர் செல்போன், ஆடியோ திருடன். நாம் தமிழர் கட்சியினரின் 14 செல்போன்களை திருடியவர் அவர். அதிலிருந்த ஆடியோக்களை வெளியிட்டது வருண்குமாரா? இல்லையா? நேர்மையானவராக இருந்தால் பதில் கூறட்டும். தமிழக அரசு என்னோடு மோத வழியில்லாமல், ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரை நிறுத்தி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. எதற்காக அவருக்கு டிஜிபி பதவி உயர்வு. அதுவும், கணவன் மனைவி இருவருக்கும் ஹனிமூன் ட்ரிப் போல, திண்டுக்கல் திருச்சியில் பணியமர்த்திப்பட்டுள்ளனர். அனைவருக்கும் பணியிடமாறுதல் வழங்கிய அரசு வருண்குமாரை மட்டும் அதே இடத்தில் பணியமர்த்தி உள்ளது. வருண் குமார் என்னை என்ன செய்துவிடுவார்? எங்கள் கட்சியினரின் செல்போன்களை திருடிச் சென்று அதிலிருந்த ஆடியோவை திமுக ஐடி விங்குக்கு கொடுத்துவிட்டு, அங்குள்ள சில அல்லக்கைகளை வைத்து பேச வைத்து வருண் குமார். இவ்வாறு அவர் கூறினார்.