இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில்!

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதில் அனைத்து தரப்பினர் விளக்கத்தைக் கேட்டு முடிவெடுக்க நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் இப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் சில பரபர கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் என்னவெல்லாம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது அதிமுக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என்று இரண்டு கும்பலாகப் பிரிந்து இருந்தது. அந்த சமயத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்குச் செல்லும் என்பது குழப்பம் நிலவியது. இந்தச் சூழலில் தான் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது.. அதில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்தே மொத்தமாக நீக்கப்பட்டனர். இருப்பினும், ஓபிஎஸ் தான் உண்மையான அதிமுக எனச் சொல்லி வந்தார். இந்தச் சூழலில் தான் கடந்தாண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் இரட்டை இலை யாருக்கு என்பதில் கேள்வி எழுந்த நிலையில், தேர்தல் ஆணையம் இரட்டை இலக்கு சின்னத்தை அதிமுகவுக்கு வழங்கியது. அதேபோல நீதிமன்றமும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரித்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இது அமைந்தது.

இருப்பினும், தீர்மானங்கள் குறித்த வழக்கு உரிமையில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த வழக்கு முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று வழக்குகள் தொடரப்பட்டன. முதலில் இந்த புகார் தேர்தல் ஆணையத்திடமே அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காகத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அனைத்து தரப்பினரையும் விசாரித்து இதில் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்தச் சூழலில் தான் இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார். இது குறித்த விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.

அதில் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் ஓரளவு மட்டுமே தலையிட முடியும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவருக்கும் அதிமுகவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும், அவரது புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2022ம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நீதிமன்றங்கள் அங்கீகரித்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத ராம்குமார் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இதே விவகாரம் தொடர்பாகக் கடந்த டிச. 23ம் தேதி முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான சி.வி. சண்முகம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றங்கள் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியுள்ளதால், தேர்தல் ஆணையமும் தங்களுக்குச் சாதகமான முடிவையே எடுக்கும் என நம்பிக்கையில் எடப்பாடி தரப்பினர் உள்ளனர்.