ஞானசேகரன் மீது 20 வழக்குகள் நிலுவையில் இருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? மகளிர் ஆணையம்!

குற்ற வழக்கில் தொடர்புடைய நபரை இயல்பாக நடமாட தமிழக அரசு எப்படி அனுமதித்தது என தேசிய மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் நேற்று சென்னை வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், போஷ் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்தியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமரா குறித்தும் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளிடமும் பல்கலைக்கழக காவலாளிகள், விடுதி வார்டன்கள், உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தலைமையில் 4 பேர் கொண்ட உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

விசாரணை இன்னும் முழுவதுமாக முடிவடையாத நிலையில் இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமார் கூறியதாவது:

விசாரணை இன்னும் முடியவில்லை. இன்றும் நடைபெற்றது. தமிழக ஆளுநரை சந்தித்தோம். இந்த விசாரணைக்கு பிறகு பாலியல் வன்கொடுமை குறித்த இறுதிகட்ட அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும். பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினோம். குற்ற வழக்கில் தொடர்புடைய ஞானசேகரன் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்திருப்பதாக சொல்கிறார்கள். எனினும் குற்ற வழக்கில் தொடர்புடைய நபரை இயல்பாக நடமாட தமிழக காவல் துறை எப்படி அனுமதித்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.