அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூட்டத்திற்குள் லாரியுடன் வந்த மர்ம நபர் வேண்டுமென்றே மோதியதில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர். வாகனத்தை ஏற்றிய டிரைவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில் புத்தாண்டு இந்திய நேரப்படி நேற்று மதியம் பிறந்தது. இந்த கொண்டாட்டமானது நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடினர். இதற்காக பல்வேறு இடங்களில் வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டன. ரிசார்டுகள், பப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடங்கள் உள்ளிட்டவைகளில் மக்கள் ஏராளமானோர் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அந்த வகையில் அமெரிக்காவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் போர்பன் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் லாரியை அந்த கூட்டத்தில் வேண்டுமென்றே கொண்டு வந்து, அங்கிருந்தவர்கள் மீது மோதினார். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. ஏராளமானோர் காயமடைந்தனர். அப்போது போலீஸாருடனான துப்பாக்கிச் சண்டையில் லாரியை செலுத்திய அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து எஃப்பிஐ அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த தாக்குதலுக்கு டிரைவர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம். சம்பவம் நடந்த இடத்தில் போலீஸார் சோதனை செய்து வெடிகுண்டு ஏதாவது வைத்திருக்கிறார்களா என தேடினர். அப்படியெதுவும் இல்லை. இது போல் வாகனத்தை மோதியதில் இறந்த 15 பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதுவரை இறந்தவர்களின் விவரங்களை போலீஸார் தெரிவிக்கவில்லை. இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சிறிது நாட்களாகும். இவை எல்லாம் முடிந்ததும் உடல்களை அடையாளம் காட்ட அவர்களின் குடும்பத்தினரிடம் நாங்கள் பேசுவோம். பிறகு அவற்றை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.