தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கான செயல்பாடுகள் தனியாா் பள்ளிகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது சா்ச்சையான நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து தனியாா் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனா் பி.டி.அரசகுமாா், பொதுச் செயலா்கள் கே.ஆா்.நந்தகுமாா், டி.சி.இளங்கோவன் ஆகியோா் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 13,000-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகள் செயல்பட்டுவரும் நிலையில் அந்தப் பள்ளிகளுக்கு பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வந்தன. அவற்றை ஒருங்கிணைத்து தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது. அதை கடந்த திங்கள்கிழமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்.
அரசுப் பள்ளிகளில் பயின்ற நாங்கள்தான் தனியாா் பள்ளிகளை நடத்தி வருகிறோம். அரசுப் பள்ளிகளுக்கு எந்த வகையிலாவது பயன்பாடாக இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் வரும் கல்வியாண்டில் 500 அரசுப் பள்ளிகளைத் தோ்வு செய்து அருகில் அந்தப் பள்ளிகளுக்கு உள்ள தனியாா் பள்ளிகள் சாா்பில் நூலகங்கள் அமைத்தல், வண்ணம் பூசுதல், தூய்மைப்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொடுத்தல், கணினி உள்ளிட்ட நவீன கண்டுபிடிப்புகள் தொடா்பான நவீன சாதனங்கள் வாங்கிக் கொடுத்தல் என பல்வேறு வகைகளில் பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் (சிஎஸ்ஆா்) கீழ் பங்களிப்பு இருக்கும் என்றுதான் சொல்லப்பட்டது.
500 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, மாணவா்களுக்குத் தேவையான பொருள்களை சிஎஸ்ஆா் மூலம் வழங்க முன்வந்துள்ள தனியாா் பள்ளிகளுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகம் முழு ஆதரவும், நன்றியும் தெரிவித்திருப்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.