மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசே ஏற்று நடத்தக் கோரிய மனு தள்ளுபடி!

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசே ஏற்று நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசின் டான் டி நிறுவனம் ஏற்று நடத்த வேண்டும் என்ற நெல்லை மாவட்ட மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி மற்றும் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு கடந்த சேம்பர் 3ம் தேதி இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்தார். இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி, நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.