“பெண்கள் பாதுக்காப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்?” என ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய பாமக மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று முறையீடு செய்தார். அப்போது நீதிபதி, இந்த விவகாரத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் தங்கள் மனதில் கைவைத்து கூறுங்கள் இந்த சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதா? பெண்கள் பாதுக்காப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், அண்ணா பல்கலை. சம்பவத்துக்கு ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. பொதுநல வழக்கில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. காவல்துறையின் விசாரணை தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது, என்று கருத்து தெரிவித்தார். மேலும், அண்ணா பல்கலைகழக வழக்கின் விசாரணையை தொடர்ந்து நீதிமன்றம் கண்காணித்து வருவதாகவும், போராட்டத்துக்கு அனுமதி கோரிய பாமகவின் முறையீட்டை விசாரிக்கவும் நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் திமுக அரசைக் கண்டித்து பாமக மகளிரணி சார்பில் இன்று (ஜன.2) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டம் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக அதிமுக, நாதக, பாஜக, மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. மேலும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸார் கைது செய்திருந்தனர். இதனால், வள்ளுவர் கோட்டம் பகுதியில் இன்று ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை முதலே போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அப்பகுதிக்கு வந்த பாமகவினரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, வள்ளுவர் கோட்டத்துக்கு வந்த சவுமியா அன்புமணியையும் போலீஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஊடகங்களைச் சந்தித்துவிட்டு, கைதாவதாக கூறினர். ஆனால், போலீஸார் அதை ஏற்க மறுத்தனர். இதனால், பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். இதனால், போலீஸாருக்கும், பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து பாமக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.