பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீன அரசு ஒப்புதல் வழங்கிய விவகாரத்தில் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும், சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக வலுவான கருத்துகளை முன்வைத்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “சீனாவின் ஹோட்டன் பகுதியில் இரண்டு புதிய மாகாணங்கள் உருவாக்கப்படுவதாக நாங்கள் அறிந்தோம். அவற்றில், இந்தியாவின் லடாக் பிராந்தியத்தின் சில பகுதிகளும் அடங்கியுள்ளன. அந்தப் பகுதியில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. புதிய மாகாணங்களை உருவாக்குவது நீண்ட காலமாக அந்தப் பகுதியில் இருந்து வரும் சீனாவின் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தாது” என்று தெரிவித்தார்.
மேலும், பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீன அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது குறித்து இந்தியா தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “இந்த விவகாரத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். நமது நலன்களை காக்க நடவடிக்கை எடுப்போம். நதி மீதான நமது உரிமைகளை நிபுணர்கள், தூதரக வியூகங்கள் வழியாக சீனாவின் மெகா அணைத் திட்டம் குறித்த நமது பார்வைகளை வலியுறுத்திக்கொண்டே இருப்போம். இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடனான முடிவுகள் இருக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரம்மபுத்திரா நதி பாயும் நாடுகளின் நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
உலகின் மிக நீளமான நதிகளில் பிரம்மபுத்திரா 15-வது இடத்திலும் அதிக தண்ணீர் பாயும் நதிகளின் பட்டியலில் 9-வது இடத்திலும் இருக்கிறது. இந்த நதியின் மொத்த நீளம் 2,880 கி.மீ. ஆகும். சீனாவின் திபெத் பகுதியில் 1,625 கி.மீ., இந்தியாவில் 918, வங்கதேசத்தில் 337 கி.மீ. தொலைவு பிரம்மபுத்திரா பாய்கிறது.
சீனாவின் திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா நதியின் பெயர் யார்லங் சாங்போ என்று அழைக்கப்படுகிறது. இந்த நதியில் புதிய அணையை கட்ட சீன அரசு மிக நீண்ட காலமாக திட்டமிட்டு இருந்தது. தற்போது யார்லங் சாங்போ நதியில் ரூ.12 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீன அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த அணையில் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
பிரம்மபுத்திரா நதியில் சீன அரசு மிகப் பெரிய அணையை கட்டுவது இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இதுகுறித்து சர்வதேச நிபுணர்கள் கூறியதாவது:-
சீனாவின் பரப்பளவில் ஐந்தில் ஒரு பங்கு திபெத் பிராந்தியம் ஆகும். ஆசியாவின் தண்ணீர் தொட்டி என்றழைக்கப்படும் திபெத் பகுதி பிரம்மபுத்திரா, சட்லஜ், மஞ்சள் நதி உட்பட 10 நதிகளின் பிறப்பிடமாகும்.
திபெத்தில் இருந்து உற்பத்தியாகும் நதிகளின் மூலம் சீனா, இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான், பாகிஸ்தான், வியட்நாம், தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, லாவோஸ் நாடுகள் வளம் அடைந்து வருகின்றன. பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த திபெத்தை சீன கம்யூனிஸ்ட் அரசு தனது இரும்பு பிடியில் வைத்திருக்கிறது. எதிர்காலத்தில் நதிகளின் நீரை திசை திருப்பி இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் மறைமுக போரில் ஈடுபட சீனா திட்டமிட்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது யார்லங் சாங்போ (பிரம்மபுத்திரா) நதியில் உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீன அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த புதிய அணை இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகில் அமைய உள்ளது.
திபெத்தில் உற்பத்தியாகும் மேக்கொங் ஆற்றில் சீன அரசு ஏற்கெனவே பல்வேறு அணைகளை கட்டி வைத்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் இந்த அணைகளில் சீன அரசு அளவுக்கு அதிகமாக தண்ணீரை தேக்கியது. இதனால் மேக்கொங் ஆறு பாயும் தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பகுதிகளில் ஆறு வறண்டது. கடந்த 2019-ம் ஆண்டில் அந்த நாடுகளில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது.
பிரம்மபுத்திரா நதியின் மூலம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மேற்குவங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் வளம் அடைந்து வருகின்றன. சீனா கட்டும் புதிய அணையால் இந்திய மாநிலங்களில் வறட்சி பாதிப்பு ஏற்படக்கூடும்.
இமயமலை பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. சீனா அணை கட்டும் இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அணையில் உடைப்பு ஏற்பட்டால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும். இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே பதற்றம் ஏற்படும்போது அணையில் இருந்து அதிக தண்ணீரை திறந்துவிட்டு இந்திய பகுதிகளில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது.
ஏற்கெனவே கங்கை நதியின் நீர்வரத்தை கட்டுப்படுத்தும் வகையில் திபெத்தின் மப்ஜா சாங்போ நதியில் புதிய அணையை சீன அரசு கட்டி வருகிறது. இந்த அணை உத்தராகண்ட் மாநில எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்தியாவின் இரு பிரதான அணைகளின் நீர்வரத்தை கட்டுப்படுத்தும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.