‛‛பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள்தான் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாமே அரசால் செய்ய முடியாது. ஒவ்வொரு பெண்ணிற்கும் தனித்தனியே காவலர்கள் போடமுடியாது” என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவியை மிரட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் மொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே தான் ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர். திமுகவை சேர்ந்த அமைச்சருடன் நெருக்கமாக இருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தற்போது இந்த விவகாரம் ஆளும் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பல இடங்களில் தடையை மீறி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் மதுரை ஆதீனம் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்த விவகாரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, மதுரை ஆதீனம், ‛‛பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள்தான் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாமே அரசால் செய்ய முடியாது. ஒவ்வொரு பெண்ணிற்கும் தனித்தனியே காவலர்கள் போடமுடியாது. அப்படிச் செய்தால் போலீஸுக்கு அந்த வேலையை பார்ப்பதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிள்ளைகளை கட்டுப்பாடாக வளர்க்க வேண்டும். என்னை என் வீட்டில் கட்டுப்பாட்டோடு வளர்த்துள்ளார்கள்” என கூறியுள்ளார்.