திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை டார்க்கெட் செய்யும் சுங்கத்துறை: துரை வைகோ!

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அமீரக நாடுகளிலிருந்து வரும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. குறிப்பிட்ட சமூகம், குறிப்பிட்ட நாடுகள் மற்றும் அதிகமாக பயணம் செல்வோரை குறிவைத்து தனியாக எடுத்து சோதனை செய்யும்போது அது தேவையில்லாத மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. இதுபற்றி அறிக்கை கேட்டுள்ளேன் என்று திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் குருவிகள் என நினைத்து பயணிகள் குறிப்பிட்ட நபர்களை தொடர்ந்து பரிசோதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இது அவர்களின் பணி என்றாலும் கூட சிலரை டார்க்கெட் செய்து சோதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் திருச்சி சர்வதேச விமான நிலைய வளர்ச்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. திருச்சி லோக்சபா எம்பி துரை வைகோ தலைமையில் திருச்சி விமான நிலையத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், விமான நிலைய இயக்குனர் (பொ) கோபால கிருஷ்ணன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, பொதுமக்களின் நலனுக்காக திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

பின்னர் துரை வைகோ எம்பி பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சியில் இருந்து அமீரக நாடுகளுக்கு விமான சேவைகள் உள்ளன. ஆனாலும் இந்த விமான பயணத்துக்கான கட்டணம் என்பது அதிகமாக உள்ளது. இதனால் விமான சேவைகள் குறைவாக உள்ளது. வெளிநாடு விமானத்தை இங்கு இயக்குவதற்கான அனுமதி கிடையாது. இந்திய விமான நிறுவனங்கள் கூடுதலாக சேவையை வழங்குவது இல்லை. இதனால் தான் இந்த கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் பெங்களூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அமீரக விமானங்களுக்கான அனுமதி வழங்க வேண்டும் அல்லது கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டும் என மத்திய அமைச்சருடன் இதுகுறித்து பேசி உள்ளேன்.

அதேபோல் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அமீரக நாடுகளிலிருந்து வரும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களிடம் அத்துமீறல் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதுபற்றி இன்னொரு உறுப்பினர் ஜாகீர் உசேன் என்பவர் எழுப்பி இருந்தார். சுங்கத்துறை அதிகாரிகளின் பணி என்பது கடினமானது. இருந்தாலுமே குறிப்பிட்ட சமூகம், குறிப்பிட்ட நாடுகள் மற்றும் அதிகமாக பயணம் செல்வோரை குறிவைத்து தனியாக எடுத்து சோதனை செய்யும்போது அது தேவையில்லாத மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. கடமையை தாராளமாக செய்யலாம். அதனை முறையாக செய்ய வேண்டும். குற்றவாளி இல்லாத நபரை குற்றவாளி கூண்டுக்குள் வைத்து அசிங்கப்படுத்தும் போது சங்கடத்தை உருவாக்குகிறது. இது திருச்சி விமான நிலையத்தில் பெரிய பிரச்னையாக, பேசும் பொருளாக உள்ளது. இது திருச்சி விமான நிலையத்துக்கு சரியானதாக இல்லை. அதோடு சுங்கத்துறைக்கும் இது அவப்பெயரை ஏற்படுத்தும். எனக்கும் கெட்ட பெயரை உருவாக்கும். இது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக சுங்கத்துறை அதிகாரி கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.