பெஞ்சல் புயல் பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த நவம்பர்.30-ம் தேதி கரையை கடந்தது. பல மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகள், விளைநிலங்கள் சேதம் அடைந்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் புயலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது. புயல், வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இதனை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும், அதற்கான பேரிடர் தொகையை விடுக்க கோரியும் தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால் மத்திய பாஜக அரசு, பெஞ்சல் புயல் பாதிப்புகளை பேரிடராக அறிவிக்க மறுத்தது. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவும் விதமாக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 944.80 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியது.
இந்த நிலையில், பெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.