சீனாவில் தற்போது எச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம், “நாட்டில் உள்ள நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியது. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதோடு, பொருளாதார நெருக்கடியானது வல்லரசு நாடுகளையே திணறடித்தது. தற்போதுதான் பல நாடுகள் மீண்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹியூமன் மெடா நிமோ வைரஸ் எச்எம்பிவி (Human metapneumovirus) என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த வைரஸ், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை அதிகமாக தாக்குவதாக கூறப்படுகிறது. எச்எம்பிவி எனப்படும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான காய்ச்சல், நுழையீரல் தொற்று பாதிப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2001-ஆம் ஆண்டில் விஞ்ஞானிகளால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.
சீனா சுகாதாரத் துறையினர் இந்த வைரஸ் பரவலை பரவக்கூடிய தொற்று நோயாக அறிவிக்கவில்லை. ஆனால், குளிர்காலங்களில் மூச்சுத் திணறல் மற்றும் சளி தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால், அதிகமானோர் மருத்துவமனைகளில் சேர்ந்து வருவதை கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைரஸ் பொதுவாக சுவாசப்பாதை மற்றும் தொண்டையில்தான் தொற்றை ஏற்படுத்தும். அதாவது இருமல், சளி அல்லது மூக்கு அடைப்பு , காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படும். ஒரு சிலருக்கு நிமோனியா, ஆஸ்துமா உள்ளிட்டவற்றை உண்டாக்கும். அதேநேரத்தில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் மனிதர்களை பொறுத்து மாறுபடும். ஒரு சிலருக்கு வீட்டில் முறையான கவனிப்பு இருந்தாலே இத்தொற்று சரியாகிவிடும்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) நாட்டில் உள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவிக்கிறது. இந்த வைரஸ் உலகளவில் வேகமாக பரவி வருவதாக சீன அரசாங்கமோ அல்லது உலக சுகாதார நிறுவனமோ உறுதிப்படுத்தவில்லை.