லடாக்கில் 2 மாவட்டங்களை உருவாக்கும் சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியா தெரிவித்திருக்கும் ஆட்சேபனை போதுமானது அல்ல என்றும், இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பிரிவு தலைவர் பவன் கெரா கூறியதாவது:-
ஹொட்டான் மாகாணத்தில் சீனா இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்கிய விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கும் வெளிப்படையான ஆட்சேபனை போதுமானது அல்ல. 2020 ஜூன் 20 அன்று நமது பிராந்தியத்தில் நிகழ்ந்த சீன ஊடுருவலுக்குப் பிறகு பிரதமர் வழங்கிய நற்சான்றிதழ் (clean chit) காரணமாகவே, சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இப்போது சீனா ஹோட்டான் மாகாணத்தில் இரண்டு மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. ஆனால், அந்தப் பகுதி பாரம்பரியமாகவும், வரலாற்று ரீதியாகவும் நம்முடையது. இந்த பகுதி மீதான நமது உரிமைகோரலில் காங்கிரஸ் மிகவும் உறுதியாக இருக்கிறது. இந்த விவகாரத்தில், இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கும் ஆட்சேபனை வேலை செய்யாது. இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நமது நலன்களுக்கு விரோதமான அண்டை நாடுகளுக்கு நற்சான்றிதழ் வழங்கக் கூடாது என்பதை பிரதமர் உணர வேண்டும்.
மேலும், பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் சீனாவின் திட்டம் வடகிழக்கு பிராந்தியத்தில் நமது நலன்களை சீர்குலைத்து அழிவை ஏற்படுத்தும். இது மிக மோசமான எதிர்வினையை நமது வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.