மன்மோகன் சிங் வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்பு!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இரங்கல் நிகழ்ச்சி நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொண்டு மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ஹமீது அன்சாரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து கார்கே கூறுகையில், “இந்த நிகழ்ச்சியில் குரு கிரந்த் சாஹிப்பின் தொடர்ச்சியான பாராயணம் நடைபெற்றது. இந்தியாவின் 13-வது பிரதமர் மன்மோகன் சிங்கின் பாரம்பரியத்தை கவுரவிக்கும் வகையில் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்று மறைந்த மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இவர்களைத் தவிர, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, மன்மோகன்சிங்கின் நண்பர்கள், நலம் விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தனது 92 வயதில் காலமானார். டிசம்பர் 28-ம் தேதி டெல்லியில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்ர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.