டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் அருகே போராட்டம்!

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் அருகே பெண்கள் ஒப்பாரி வைத்தும், கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்திற்கான ஏலத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை மக்கள் தொடர்ந்து நடத்துகின்றனர். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மேலூர் தும்பைப்பட்டியில் கருப்புத் துணிகளைக் கட்டி போராட்டம் நடத்த கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதன்படி, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சேர்ந்த பெண்களும், ஆண்களும் தும்பைப்பட்டியில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். விவசாயத்தை பாதிக்கும் இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என,கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுபோன்று மேலூர் அருகிலுள்ள மேலவளவு கிராமத்திலும் பொதுமக்கள் ஒன்றிணைந்து டங்ஸ்டன் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள் கும்மி அடித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உழவுக்கு பயன்படுத்தும் டிராக்டர்களை அங்கு நிறுத்தி வைத்துக்கொண்டு தங்களது எதிர்ப்புக்களை பதிவு செய்தனர். மேலூர் பகுதியில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஒரே நாளில் இருவேறு இடங்களிலும் கிராம மக்கள், பெண்கள் ஒன்றிணைந்து போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.