பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த மார்க்சிஸ்ட் மாநாட்ட்டில் தீர்மானம்!

‘பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக. தமிழக குழந்தைகள் நல ஆணையத்துக்கு தலைவரை நியமித்திட வேண்டும்’ என்று உள்ளிட்ட தீர்மானங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மூன்று நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* வளங்கள் – வாழ்வாதாரங்களை பாதுகாப்போம். மதவெறியை வீழ்த்தி முற்போக்கு விழுமியங்களை முன்னெடுப்போம். பேரிடராக வளர்ந்து கொண்டிருக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் பாசிச அரசியலை தனிமைப்படுத்த வேண்டும் என்பதே நமது முக்கிய அரசியல் கடமை.

* நில உரிமையை பாதுகாத்திட மாநில அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

* மாநகராட்சி, நகராட்சியுடன் கிராமப்புற பஞ்சாயத்துகளை இணைக்கும் நடவடிக்கைகளை மக்கள் விருப்பத்துக்கு விரோதமாக மக்கள் கருத்தரியாமல் அரசு மேற்கொள்ள கூடாது.

* சிறு, குறு, நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வையும், நிலைக் கட்டணத்தையும் கைவிட வேண்டும். சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் வழங்கப்படுவதை முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.

* இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் சமத்துவத்துடன் வாழவும், மாகணங்களுக்கான அதிகாரப் பரவலை உறுதி செய்திடுக.

* விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய முத்தரப்பு குழு அமைத்து பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அரசியல் களத்தில் மட்டுமின்றி சமூக தளத்திலும் விஷமாக வளர்ந்து வரும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மதவெறி சக்திகளை முற்றிலுமாக முறியடித்து, நம் நாட்டின் அரசியல், சமூக பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க போராடுவோம்.

* கச்சா எண்ணெய் விலை குறைந்தும் குறையாத பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை! மக்கள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் நோக்கங்களை குலைக்காமல் செம்மையாக செயல்படுத்திடுக.

* பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக. தமிழக குழந்தைகள் நல ஆணையத்துக்கு தலைவரை நியமித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.