அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்தும், இதில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மாணவிக்கு நடந்த பாலியல் கொடூரத்தை கண்டித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்துள்ளோம். அண்ணா பல்கலை.யில் இரவு நேரத்தில் இந்த குற்றம் நடந்துள்ளது. அந்த குற்றவாளி ஆளுங்கட்சியை சேர்ந்தவர். அந்த குற்றவாளி மீது ஏற்கெனவே 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கக்கூடிய சூழலில் அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிசிடிவி அங்கு இயங்கவில்லை அதற்கு யார் காரணம்?
அண்ணா பல்கலைக்கழகம் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா? இது திட்டமிட்டு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமையாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கேட்கக்கூடிய ஒரே கேள்வி யார் அந்த சார்? . இந்த வார்த்தையை வைத்து ஒரு திரைப்படமே எடுக்கலாம். எனவே அண்ணா பல்கலை. விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த உடனே தேசிய கீதம் படிக்க வேண்டும். தேசிய கீதம் படிப்பதற்கு முன்பே சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆளுநரை முற்றுகையிட்டு உரையை படிக்க விடவில்லை, இதனால் ஆளுநர் கிளம்பிவிட்டார். தற்போது ஆளுநரின் உரையை சபாநாயகர் படிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.