தனது தந்தை குறித்து பாஜக மூத்த தலைவர் அவதூறாக பேசியதாக டெல்லி முதல்வர் ஆதிஷி செய்தியாளர்களுக்கு கண்ணீர்மல்க பேட்டியளித்தார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஆதிஷி, கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி களமிறங்கி உள்ளார். இவர் 3 முறை எம்எல்ஏ ஆகவும் 2 முறை எம்பியாகவும் பதவி வகித்துள்ளார்.
ரமேஷ் பிதுரி அண்மையில் பேசும்போது, “பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போன்று கல்காஜி தொகுதியில் சாலைகளை அமைப்பேன்” என்று கூறினார். இதற்கு கடும் ஆட்சேபம் எழுந்ததால் அவர் வருத்தம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ரமேஷ் பிதுரி நேற்று முன்தினம் கூறும்போது, “ஆதிஷியின் தந்தை பெயர் மர்லேனா. அவர் தனது பெயரில் மர்லேனாவை மாற்றிவிட்டு சிங்கை சேர்த்திருக்கிறார்” என்று கூறினார்.
இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் ஆதிஷி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
எனது தந்தைக்கு 80 வயதாகிறது. அவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து இருக்கிறார். தற்போது உடல் நலம் குன்றி நடக்க முடியாத நிலையில் உள்ளார். எனது தந்தை குறித்து பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி அவதூறாக பேசியதை கண்டிக்கிறேன். அரசியல் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகும் என்று நினைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஆதிஷி செய்தியாளர்களுக்கு கண்ணீர்மல்க பேட்டியளித்தார். இந்த வீடியோ, புகைப்படத்தை ஆம் ஆத்மி கட்சியினர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.