அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 6 தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது. சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்க ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை ஈடுபட்டுள்ளது.
அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள 300 அடி ஆழம் கொண்ட நிலக்கரி சுரங்கத்தில் நேற்று (ஜன. 6) எதிர்பாராத விதமாக வெள்ளம் சூழ்ந்ததில் சுரங்கத்தினுள் இருந்தவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 6 பேர் உள்ளே சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உள்ளூர் அதிகாரிகள், அவசரகால உதவியாளர்கள், சுரங்க நிபுணர்கள் அடங்கிய குழுக்களுடன் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
மேலும், உள்ளே இருக்கும் தொழிலாளர்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் மாநில காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைக்கு உதவ தண்ணீரில் ஆழமான பகுதிக்குச் செல்லக்கூடிய பயிற்சி பெற்ற கடற்படை நீச்சல் வீரர்கள் கோரப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், கங்கா பகதூர் ஷ்ரத், ஹுசைன் அலி, ஜாகிர் உசேன், சர்பா பர்மன், முஸ்தபா சேக், குஷி மோகன் ராய், சஞ்சித் சர்க்கார், லிஜான் மகர் மற்றும் சரத் கோயாரி ஆகிய தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாகத் தெரிவித்த முதல்வர், சரியான எண்ணிக்கை மற்றும் நிலை இன்னும் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சுரங்கத்தினுள் நீர்மட்டம் ஏறக்குறைய 100 அடியாக உயர்ந்துள்ளதாக நிலைய குழுவின் மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை டைவர்ஸ், விசாகப்பட்டினத்தில் அசாமுக்கு விரைந்துள்ளதாகவும் அவர்கள் விரைவில் சம்பவ இடத்தை அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த கருவிகள், டைவர்ஸ் மற்றும் மருத்துவக் குழுக்களுடன் பொறியாளர்கள் பணிக்குழுவும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மீட்புப் பணிகளில் உதவிய ராணுவத்துக்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நன்றி தெரிவித்தார். ”இந்த விரைவான உதவிக்கு மிக்க நன்றி. எங்களின் சுரங்கத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்’’ என்று முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தண்ணீரை வெளியேற்ற இரண்டு நீர் இறைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், சுரங்கத்தினுள் எப்படி நீர் புகுந்தது என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.