திமுக போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த கமிஷனர் மீது நடவடிக்கை கோரி பாஜக வழக்கு!

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறை, ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் கேட்டு கோயம்புத்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையில் குஷ்பு , சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் போராட்டம் நடத்த காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஜனவரி 6 ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு சென்னையில், எந்த ஆர்ப்பாட்டமும், போராட்டமும் , ஊர்வலமும் நடத்தக்கூடாது என காவல்துறை விதிமுறைகள் தொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளார். ஆனால், அடுத்த நாளான 7 ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதிலும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சென்னை சைதாப்பேட்டையில் ஆர் எஸ் பாரதி, திமுக துணை பொது செயலாளர் கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்தியுள்ளனர். இதில், காவல்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படுவதன் மூலம் காவல்துறை ஒருதலைபட்சமாகவே செயல்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சியினருக்கு அனுமதி வழங்க மறுக்கும் காவல்துறையினர், எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விண்ணப்பம் பெறாமலே ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போராட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சென்னை நகர போலீஸ் சட்ட விதியை மீறி செயல்பட்ட சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறைச் செயலாளருக்கும் டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.