“எந்த வேலையும் செய்யாத மக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கு அரசுகளிடம் போதுமான பணம் உள்ளது, ஆனால் மாவட்ட நீதித்துறை நீதிபதிகளுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது என்றால் மட்டும் நிதி நெருக்கடி இருப்பதாகக் கூறுவதா?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அகில இந்திய நீதிபதிகள் சங்கம் கடந்த 2015-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வு விசாரணையின்போது, அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, நீதித்துறை அதிகாரிகளின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை முடிவு செய்யும் விஷயத்தில் அரசாங்கம் நிதிக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது என்று தெரிவித்தார்.
அப்போது, “எந்த வேலையும் செய்யாத மக்களுக்கு வழங்க அரசுகளிடம் பணம் உள்ளது. தேர்தல் நெருங்கிவிட்டால் பெண்களுக்கு மரியாதை திட்டம் உள்பட பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கிறீர்கள். அதற்காக குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகிறீர்கள். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல கட்சிகள் இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ. 2,500 வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட நீதித்துறை நீதிபதிகளுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும்போது நிதி நெருக்கடியைக் காரணம் காட்டுகின்றனர்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நிதி நெருக்கடி சார்ந்த அரசின் உண்மையான கவலைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று வெங்கடரமணி வேண்டுகோள் விடுத்தார்.
சில ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை ஓய்வூதியம் பெறுவது பரிதாபத்திற்குரியது என்று உச்ச நீதிமன்றம் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.