அண்ணா பல்கலை. விவகாரத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை மேற்கோள்காட்டி முதல்வர் நியாயப்படுத்துகிறார்: ஆர்.பி.உதயகுமார்!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை விவகாரத்தை, பொள்ளாட்சி சம்பவத்தை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்துவதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின், செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது ஒரு குற்றம் நடந்தது என்றால், அதுகுறித்து வந்த புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகின்ற முதல் தகவலறிக்கையை வெளியிடக் கூடாது என்பது விதி. அதை உச்ச நீதிமன்றமும் உறுதிபடுத்தியிருக்கிறது. ஆனால் இவ்வழக்கில் முதல் தகவலறிக்கை வெளியாகி பரவியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்படும் பெண்கள் துணிச்சலோடு வெளியில் வந்து புகார் கொடுப்பது அரிது. ஆனால் அப்படி புகார் கொடுத்தும் அதை வெளியிடுவது என்பது பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் காவல்துறைக்கு உடனடியாக வந்து புகார் அளிக்கவே அஞ்சுகிற நிலைமையை ஏற்படுத்தும். இதுகுறித்து சட்டப்பேரவையில் நடந்த கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தின்போது, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிதி கிடைக்க வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம்.

இதற்கு பதிலளித்த முதல்வர், இச்சம்பவத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல. மத்திய அரசின் கீழே செயல்படும் தேசிய தகவல் மையம் சார்பில் முதல் தகவலறிக்கை கசிந்தது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தட்டிகழிக்கிறார். முதல் தகவலறிக்கை காவல்துறை கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அது ஏன் வெளியானது? இதேபோல் அரசு கோப்புகளை எல்லாம் வெளியிட்டு விட்டு, அதையும் தொழில்நுட்ப கோளாறு என்று கூறலாமா? அதேபோல் விசாரணை ஆரம்பகட்டத்தில் இருக்கும் போதே, காவல்துறை ஆணையர் குற்றவாளி ஒருவர் தான் என்று ஒப்புதல் வாக்கு மூலமாக தெரிவிக்கிறார்.

இதை கண்டித்து போராட்டம் நடத்தும் எதிர்கட்சியினர் அனைவரும் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் ஆளுநருக்கு எதிராக திமுகவினர் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். அது எப்படி? எனில் ஆளும் கட்சிக்கு ஒரு நீதி. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதி. இதன்மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது கேள்விக் குறியாகியுள்ளது. இதற்கிடையே பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையும் கையில் எடுக்கிறார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு உடனடியாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று பரிந்துரை செய்தது அன்றைய முதல்வர் பழனிசாமி. அந்த உண்மை தகவல்களை எல்லாம் மறைத்துவிட்டு, பொள்ளாச்சி சம்பவத்தை முதல்வர் மேற்கோள் காட்டுவது, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தை நியாயப்படுத்துவை போலத்தான் அமைந்திருக்கிறது. இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.