பெரியார் குறித்த கருத்து: தபெதிக-நாம் தமிழர் இடையே மோதல் நிகழாமல் தடுத்த போலீசார்!

பெரியார் பற்றி சீமான் தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கோரி அவரை சந்திக்க புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் மறியலில் ஈடுபட்டு நாம் தமிழர் கட்சி கொடிகளை பிய்த்து எறிந்தனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் வந்ததால் தகராறு ஏற்படும் சூழல் உருவானது. இருதரப்பையும் போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரியில் இன்று லெனின் வீதியிலுள்ள திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இதில் சீமான் பங்கேற்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கோரி அவரை சந்திக்க நெல்லித்தோப்பு சிக்னலில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் குவிந்தனர். அதையடுத்து காலை 11 மணிக்கு இந்நிகழ்வில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர் புதுச்சேரியில் வந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் பெரியார் திராவிடக்கழகத்தினர் நெல்லித்தோப்பிலிருந்து லெனின் வீதியில் நடக்கும் நாம் தமிழர் கூட்டத்துக்கு வரும் சீமானிடம் பெரியார் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு ஆதாரம் கேட்க உள்ளதாக ஊர்வலமாக புறப்பட்டனர். போலீஸார் அவர்களை தடுத்ததால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சீமான் படத்தை அடித்து தீவைத்தனர். அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. அதை பிடுங்கி எறிந்தனர். போலீஸார் இதையடுத்து அவர்களை கைது செய்து வேனில் ஏற்ற தொடங்கினர்.

இந்நிலையில் இத்தகவல் அறிந்து கலந்தாய்வு கூட்டத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் நெல்லித்தோப்பு சிக்னல் நோக்கி வரத்தொடங்கினர். போலீஸார் அவர்களை தடுத்தனர். இந்நிலையில் பெரியார் திராவிடர் கழகத்தினரும் அவர்களை நோக்கி சென்றனர். ஒரு கட்டத்தில் தகராறு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. போலீஸார் இரு தரப்பினரையும் தடுத்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒருக்கட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தினரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். நாம் தமிழர் கட்சியினரை தடுத்து கலந்தாய்வு கூட்டம் நடக்கும் மண்டபத்துக்கு திருப்பி அனுப்பினர். முக்கியமான சாலையில் நடந்த இந்நிகழ்வினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிட கழகம் அறித்திருந்தது. அதன்படி தபெதிகவினர் 50க்கும் மேற்பட்டோர் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நோக்கிச் சென்றனர். சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் 200 மீட்டருக்கு முன்பு பேரிகார்டுகள் அமைத்து போலீசாரால் தபெதிகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, சீமானுக்கு எதிராக தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் முழக்கம் எழுப்பினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட வந்த தபெதிக-வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அருகில் உள்ள சமூதாயக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தபெதிக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், “தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சீமான், பெரியாரை பற்றியும், பெண்களை இழிவுபடுத்தியும் சீமான் பேசி இருக்கிறார். அவரது பேச்சு எந்தவித ஆதாரமும் அற்றது. அவர் ஒரு கீழ்த்தரமான செய்தியை பெரியார் சொன்னதாக சொல்கிறார். அதற்கு அவர் ஆதாரம் தரவேண்டும். பெரியாருக்கு, பெரியார் என பெயர் சூட்டியது பெண்கள். உலகம் முழுவதும் உள்ள பெண்ணிய தத்துவவாதிகள் சொல்லாதவற்றையும் கூட பேசியவர் போராடியவர் பெரியார். அப்படிப்பட்டவரை இழிவு செய்திருக்கிறார். சங் பரிவார் கும்பல் தான் இப்படிப்பட்ட தவறான பிரச்சாரத்தை செய்து வந்தது. அந்தப் பிரச்சாரத்தை நம்பி இப்படி பேசி இன்று தமிழ்நாட்டு மக்களிடத்தில் வசமாக சிக்கி இருக்கிறார் சீமான். கடந்த காலங்களில் சங் பரிவார் கும்பல்கள் இதே கருத்தைப் பேசினார்கள். பெரியார் சொன்னதாக விடுதலை நாளேட்டை ஆதாரமாகச் சொன்னார்கள். ஆனால், அதே தேதியிட்ட விடுதலை நாளேட்டையே எடுத்துப் போட்டு அந்த பிரச்சாரத்தை முறியடித்தோம். தொடர்ந்து அவதூறான செய்தியை பரப்பி வரும் சீமான் இனி எந்த இடத்திலும் நுழைய விட மாட்டோம்” எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.