இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது. வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். 2 ஆண்டுகள் வரையில் இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி. நாராயணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. நாராயணன் அவர்கள், விண்வெளி அறிவியல் துறையின் மிக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது நம் மாநிலத்திற்கு பெருமை. தங்கள் தலைமையில், இந்திய நாடு விண்வெளி ஆராய்ச்சியில் இன்னும் பல உச்சங்களைத் தொட வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.