அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் முடிவு காணும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என சூரியமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரரின் கோரிக்கை நான்கு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம் நான்கு வாரங்களில் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க கூடாது என முன்னாள் எம்பி ரவீந்திரநாத் மற்றும் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனுவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மனுதாரர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகிய அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த வாரம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினர் கிடையாது. உறுப்பினர் இல்லாத ஒருவர், கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக வழக்கை தொடர எந்தவித முகாந்திரம் இல்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சியின் உள் விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியாது. கட்சி உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பாக இந்த மனுதாரர் கோரியுள்ள நிவாரணங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவையும் கிடையாது என்பதை ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். சூர்யமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் சுப்ரமணியன் மற்றும் ஸ்ரீ குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கட்சியில் உறுப்பினர்களாக இல்லாத தனிப்பட்ட நபர்கள் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருக்கிறார்கள். இதை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது என கூறி தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், எடப்பாடி பழனிசாமியின் மனுவுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.