இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது: பிரதமர் மோடி!

21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது என்று சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, திறன்நிறைந்தவர்களுக்கான உலகின் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார்.

ஒடிசாவில் நடந்த 18வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் (பிரவாசி பாரதிய திவஸ்) பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

21ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது. இன்னும் பல தசாப்தங்களுக்கு உலகின் இளமையான, திறன்மிக்கவர்கள் உள்ள நாடாக இந்தியா திகழும். திறமையானவர்களுக்கான உலகின் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும். அதற்கான ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது.

உங்கள் அனைவரையும் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்களிடமிருந்து எனக்கு கிடைத்துள்ள அன்பு மற்றும் ஆசீர்வாதத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். இன்று உங்கள் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். உங்களால்தான் நான் தலைநிமிரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நான் பல உலகத்தலைவர்களைச் சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவரும் அவர்கள் நாட்டிலுள்ள இந்திய புலம்பெயர்ந்தோரைப் பாராட்டுகின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் முக்கியமான சமூக காரணம் நீங்கள் கொண்டுள்ள சமூக மதிப்புதான்.

நண்பர்களே உங்களின் வசதிக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். உங்களின் பாதுகாப்பும், நலனும் எங்களின் முன்னுரிமை. நெருக்கடியான காலங்களில் எங்களின் புலம்பெயர்ந்தோருக்கு, அவர்கள் எங்கிருந்தாலும் சரி அவர்களுக்கு உதவுவதை நாங்கள் எங்களின் பொறுப்பாக கருதுகிறோம். இது இன்றைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஒரு வழிகாட்டுதலாக மாறியுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

இதனிடையே இந்த விழாவில் பேசிய ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, “ஒடிசா மாநிலம் பன்முக கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பின் முழுமையான தொகுப்பாகும். ஒடிசி இந்தியாவின் பழமையான நடன வடிவங்களில் ஒன்றாக திகழ்கிறது. பட்டசித்ராவில் உள்ள சிக்கலான கலை இன்றும் உலகினை மயக்கத்தில் வைத்துள்ளது. உலகப் புகழ் பெற்ற சம்பல்பூரின் கைத்தறி துணிகள் நமது நேசத்துக்குரிய மற்றும் துடிப்பான பாரம்பரியங்களில் ஒன்றாகும். பாரம்பரியங்களைக் கடந்து ஒடிசா இயற்கை வனப்பின் புதையலுமாகும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு ஒடிசா மாநில முதல்வர் மோகன் மாஜி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு என்பது புலம்பெயர்தோர்களை இணைக்கவும் ஒன்று கலக்கவும், ஒருவருக்கொருவார் உரையாடவும் வழிவகை செய்ய இந்திய அரசால் நடத்தப்படும் ஒரு முக்கிய நிகழ்வாகும். 18வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டினை ஒடிசா மாநில அரசுடன் இணைந்து இந்திய அரசு நடத்துகிறது. இது ஜனவரி 8- 10ம் தேதி வரை ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடக்கிறது.