கதிர் ஆனந்த் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.

திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு உள்ளிட்ட இடங்களிலும், அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வேலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கிங்ஸ்டன் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அந்த கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில், அந்த சீலை அகற்ற உத்தரவிடக்கோரி கிங்ஸ்டன் கல்லூரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அமலாக்கத்துறையின் சோதனைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரியில் உள்ள கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை செயல்பட முடியாததால் கல்லூரியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கிங்ஸ்டன் கல்லூரியில் 1,400 மாணவர்கள் படிப்பதாகவும் அவர்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறினார். கல்லூரியின் சர்வர் அறை சீல் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும் கல்லூரி விடுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் வேலை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், இது மாணவர்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது எனவும் தெரிவித்தார். மாணவர்கள் நலன் கருதி சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், சோதனைக்கு சென்ற போது தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை எனவும், சர்வர் அறையின் சாவியை கூட கொடுக்கவில்லை எனவும் கார்பெண்டர் உதவியுடன் தான் அறைகள் திறக்கப்பட்டதாகவும் கூறினார். கல்லூரியில் இருந்து இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், சர்வர் ரூமில் இருந்த கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்ய ஒத்துழைக்காததால் தான் சர்வர் ரூம்க்கு சீல் வைத்ததாகவும் கூறினார். அந்த சீல் பின்னர் அகற்றப்பட்டு கணக்கு விவரம் சார்ந்த கம்ப்யூட்டர்களில் இருந்த ஹார்ட் டிஸ்க் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறுவது தவறு எனவும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களை தாங்கள் அளித்ததன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு கல்லூரி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இதற்கு மேல் எதுவும் தேவைப்பட்டால் சட்டப்படி நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.